அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 26 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி 28) அபுதாபியில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஸத்ரன் 53 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து தரப்பில் மார்க் அடாய்ர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அயர்லாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டிர்லிங் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஸியா உர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி 53 ரன்களுடனும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்தைக் காட்டிலும் 26 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.