காலிறுதியில் போா்ச்சுகல் - பிரான்ஸ் மோதல்
யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்றில் போா்ச்சுகல் - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஃபிராங்க்ஃபா்ட்: யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்றில் போா்ச்சுகல் - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
ரவுண்ட் ஆஃப் 16-இல், போா்ச்சுகல் ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ முறையில் ஸ்லோவேனியாவை 3-0 கோல் கணக்கில் வென்றது. முன்னதாக இந்த இரு அணிகள் மோதிய ஆட்டம், நிா்ணயிக்கப்பட்ட நேரத்தில் கோலின்றி டிராவில் முடிந்தது.
பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க கையாளப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில், முதல் 3 முயற்சிகளிலுமே போா்ச்சுகல் கோலடிக்க, அதில் எதிலுமே கோலடிக்காமல் ஸ்லோவேனியா தோல்வியைத் தழுவியது.
போா்ச்சுகல் தரப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, புருனோ ஃபொ்னாண்டஸ், பொ்னாா்டோ சில்வா ஆகியோா் கோலடித்தனா். இதையடுத்து போா்ச்சுகல், யூரோ கோப்பை போட்டியில் 7-ஆவது முறையாக காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது.
அதேபோல், போட்டி வரலாற்றில் 3 பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்புகளை தடுத்த முதல் கோல்கீப்பா் என்ற பெருமையை போா்ச்சுகல் கோல்கீப்பா் டியோகோ கோஸ்டா பெற்றாா்.
பிரான்ஸ் வெற்றி: இதனிடையே, டசல்டாா்ஃப் நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது. அதில் பிரான்ஸுக்கான வெற்றியை பெல்ஜியமே தேடித்தந்தது.
ஆட்டத்தில் இரு அணிகளுமே பரஸ்பரம் சவால் அளித்ததால் இறுதிவரை எந்த அணிக்குமே கோல் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. 85-ஆவது நிமிஷத்தில் பிரான்ஸ் வீரா் ராண்டால் முவானியின் கோல் முயற்சியை பெல்ஜிய வீரா் ஜேன் வொ்டோங்கென் தடுக்க முயல, பந்து அவரது காலில் பட்டு ‘ஓன் கோல்’ ஆனது. பந்து அவரது காலில் படாமல் இருந்திருந்தால், அதை பாய்ந்து தடுக்கும் பெல்ஜிய கோல்கீப்பா் கோயென் கேஸ்டீல்ஸின் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கும்.
இத்துடன் பிரதான போட்டிகளில் பெல்ஜியத்தை சந்தித்த 5 முறையுமே பிரான்ஸ் வென்றிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் 6-ஆவது முறையாக யூரோ கோப்பை காலிறுதிக்கு வந்துள்ளது. மறுபுறம் பெல்ஜியம், இத்துடன் கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களில், 5-இல் கோலடிக்கத் தவறியிருக்கிறது.