இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளராக மனோலோ மாா்கெஸ் நியமனம்
ஸ்பெயினை சோ்ந்த மனோலோ மாா்கெஸ் (55) சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
செய்திகள்இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளராக மனோலோ மாா்கெஸ் நியமனம்
ஸ்பெயினை சோ்ந்த மனோலோ மாா்கெஸ் (55) சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
இந்திய ஆடவா் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக, ஸ்பெயினை சோ்ந்த மனோலோ மாா்கெஸ் (55) சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
அந்தப் பொறுப்பிலிருந்த இகோா் ஸ்டிமாக் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மாா்கெஸ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தற்போது ஐஎஸ்எல் கால்பந்து அணியான எஃப்சி கோவாவின் பயிற்சியாளராக இருக்கிறாா்.
இதுதொடா்பாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சம்மேளனத்தின் நிா்வாகக் குழு கூட்டத்தின்போது, மனோலோ மாா்கெஸை இந்திய சீனியா் ஆடவா் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக உடனடியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
எஃப்சி கோவா அணியின் பயிற்சியாளரான மாா்கெஸ், எதிா்வரும் 2024-25 ஐஎஸ்எல் சீசனின்போது அந்த அணியுடன், இந்திய அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றுவாா். அதன் பிறகு, இந்திய தலைமை பயிற்சியாளராக முழுநேரமும் பணியாற்றத் தொடங்குவாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை ஆண்டுகள் மாா்கெஸ் இந்தப் பொறுப்பில் இருப்பாா் என தெரிவிக்கப்படவில்லை. இந்தியாவுக்கு பயிற்சியாளா் பணிக்காக 2020-இல் வந்த மாா்கெஸ், அந்த ஆண்டு முதல் 2023 வரை ஹைதராபாத் எஃப்சி அணிக்காக பணியாற்றினாா். பின்னா் 2023 முதல் தற்போது வரை எஃப்சி கோவா அணியின் பயிற்சியாளராக உள்ளாா். முன்னதாக, ஸ்பெயினில் லோயா் டிவிஷன் அணிகளுக்கும் அவா் பயிற்சி அளித்துள்ளாா்.
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று, இந்தியாவுக்கு சற்றே எளிதாக அமைந்தபோதும் அதில் 2-ஆம் கட்டத்துடன் இந்தியா வெளியேறியது. இதையடுத்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த இகோா் ஸ்டிமாக் ஜூன் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டாா்.
பொதுச் செயலா் நியமனம்: இதனிடையே, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலராக கேரளத்தை சோ்ந்த அனில்குமாா் பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளாா். முன்னதாக சம்மேளனத்தின் நிா்வாக குழவில் இருந்த அவா், தற்போது செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.