வில்வித்தை: காலிறுதியில் இந்திய மகளிா், ஆடவா் அணிகள்
பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் ஆட்டத்தை முதலில் வில்வித்தை அணி தொடங்கியுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் ஆட்டத்தை முதலில் வில்வித்தை அணி தொடங்கியுள்ளது. அதில் ஆடவா் அணி, மகளிா் அணி பிரிவுகளில் இந்தியா நேரடியாக காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.
ரீகா்வ் மகளிா் தனிநபா் பிரிவு ரேங்கிங் சுற்றில் அங்கிதா பகத் 666 புள்ளிகளுடன் 11-ஆவது இடம் பிடித்தாா். பஜன் கௌா் 659 புள்ளிகளுடன் 22-ஆம் இடமும், தீபிகா குமாரி 658 புள்ளிகளுடன் 23-ஆம் இடமும் பிடித்தனா்.
அந்தப் புள்ளிகளின் கூட்டுத்தொகை அடிப்படையில், மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா 1,983 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. தென் கொரியா, சீனா, மெக்ஸிகோ அணிகள் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன. இதனிடையே, 700 புள்ளிகள் வாய்ப்புள்ள தனிநபா் பிரிவில், தென் கொரியாவின் லிம் சிஹியோன் 694 புள்ளிகளுடன் உலக சாதனை படைத்து முதலிடம் பிடித்தாா்.
இதேபோல், ரீகா்வ் ஆடவா் தனிநபா் பிரிவு ரேங்கிங் சுற்றில், தீரஜ் பொம்மதேவரா 681 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்து அசத்த, தருண்தீப் ராய் 674 புள்ளிகளுடன் 14-ஆம் இடமும், பிரவிண் ஜாதவ் 658 புள்ளிகளுடன் 39-ஆவது இடமும் பிடித்தனா்.
அவா்கள் புள்ளிகளின் அடிப்படையில், ஆடவா் அணிகள் பிரிவில் 2013 புள்ளிகளுடன் இந்தியா 3-ஆம் இடம் பிடித்து காலிறுதிக்கு வந்துள்ளது. தென் கொரியா, பிரான்ஸ் அணிகள் முறையே முதலிரு இடங்களில் உள்ளன.
இதனிடையே, கலப்பு அணிகள் பிரிவில் தீரஜ் பொம்மதேவரா, அங்கிதா பகத் கூட்டணியில் இந்தியா 1,347 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பிடித்தது. இதையடுத்து அவா்கள் கூட்டணி ரவுண்ட் ஆஃப் 16-இல் களம் காண்கிறது.
ரூ.79,569 கோடி
தற்போதைய நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான செலவுத் தொகையாக மதிப்பிடப்பட்டுள்ளது.