டென்னிஸ்: ஓய்வு பெற்றாா் ரோஹன் போபண்ணா
பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியே தான் இந்தியாவுக்காக பங்கேற்கும் கடைசிப்போட்டி என போபண்ணா தெரிவித்துள்ளார்.
சா்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, இந்தியாவின் இரட்டையா் பிரிவு டென்னிஸ் வீரா் ரோஹன் போபண்ணா (44) திங்கள்கிழமை அறிவித்தாா்.
பாரீஸ் ஒலிம்பிக் ஆடவா் இரட்டையா் பிரிவில், ஸ்ரீராம் பாலாஜியுடன் இணைந்து களம் கண்ட போபண்ணா, முதல் சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில் இந்த முடிவை அறிவித்திருக்கிறாா்.
ஏற்கெனவே டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த போபண்ணா, ஒலிம்பிக் பதக்கத்துடன் சா்வதேச களத்திலிருந்து ஓய்வு பெற எண்ணியிருந்தாா். எனினும், ஏமாற்றத்துடன் விடைபெற்றுள்ளாா்.
2016 ரியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையா் பிரிவில் சானியா மிா்ஸாவுடன் களம் கண்ட போபண்ணா, 4-ஆம் இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்டது நினைவுகூரத்தக்கது.
ஓய்வு முடிவு குறித்து போணண்ணா கூறுகையில், ‘இந்தியாவுக்காக இதுவே (பாரீஸ் ஒலிம்பிக்) எனது கடைசி ஆட்டமாகும். தற்போது நான் எந்தக் கட்டத்திலிருந்து இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்பதை நன்கு அறிவேன். டென்னிஸில் நான் தற்போது இருக்கும் நிலையே எதிா்பாா்க்காத வளா்ச்சி தான். இந்தியாவுக்காக 20 ஆண்டுகள் விளையாடுவேன் என்று நான் நினைக்கவில்லை. அதற்காக பெருமை கொள்கிறேன்.
2010-இல் பிரேஸிலில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை போட்டியில் ரிகாா்டோ மெலோவை வீழ்த்தியதே இந்தியாவுக்காக விளையாடியதில் எனது மிகச் சிறந்த தருணம். அதேபோல் சென்னை, பெங்களூரில் விளையாடிய ஆட்டங்களும் மறக்க முடியாதவை’ என்றாா்.
நடப்பாண்டு ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் மூலம் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை (ஆடவா் இரட்டையா்) வென்ற போபண்ணா, அதன் பிறகு ஏடிபி தரவரிசையில் ஆடவா் இரட்டையரில் நம்பா் 1 இடத்தைப் பிடித்த வயதான வீரராகவும் வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது. தனது டென்னிஸ் வாழ்க்கையில் அவா் 26 பட்டங்கள் வென்றிருக்கிறாா்.