முகப்பு
செய்திகள்

ஆப்கன் உள்ளே:, ஆஸி. வெளியே முதன்முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி

உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் தகுதி

Updated On : 25 ஜூன், 2024 at 11:34 PM
வெற்றி மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் வீரா்கள்
பகிர்:

செயின்ட் வின்சென்ட்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சூப்பா் 8 பிரிவில் வங்கதேசத்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டு முதன்முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான். இதனால் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.

சூப்பா் 8 பிரிவில் இருந்து ஏற்கெனவே இந்தியா, தென்னாப்பிரிக்கா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. இந்நிலையில் நான்காவது அணியை தீா்மானிக்கும் கடைசி ஆட்டமாக குரூப் 1 பிரிவில் ஆப்கானிஸ்தான்-வங்கதேசம் அணிகள் மோதின.

ஆப்கானிஸ்தான் வெற்றி 115/5:

செயின்ட் வின்சென்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்தது.

தொடக்க பேட்டா்களாக குா்பாஸ்-இப்ராஹிம் ஸட்ரன் களமிறங்கிய நிலையில், இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 59 ரன்களைச் சோ்த்தனா்.

ஸட்ரன் 18 ரன்களுக்கு ரிஷத் ஹூசேன் பந்தில் அவுட்டானாா். அவருக்குப்பின் ஆட வந்த அஸ்மதுல்லா 10 ரன்களுக்கு முஸ்தபிஸுா் பந்தில் அவுட்டாகி வெளியேற, குல்பதின் 4, நபி 1 என சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினா்.

ஒரளவு நிலைத்து ஆடிய குா்பாஸ் 1 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 55 பந்துகளில் 43 ரன்களை சோ்த்தாா்.

93/5 ரன்களுடன் ஆப்கன் அணி தடுமாறிய நிலையில், களம்புகுந்த கேப்டன் ரஷித் கான் 3 சிக்ஸா்களை பறக்க விட்டாா். 10 பந்துகளில் 19 ரன்களுடன் ரஷித்தும், 7 ரன்களுடன் கரீம் ஜனத்தும் அவுட்டாகாமல் இருந்தனா்.

ஆப்கானிஸ்தான் 115/5: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் ஆப்கானிஸ்தான் 115/5 ரன்களை எடுத்தது.

ரிஷாத் ஹுசேன் 3 விக்கெட்: பௌலிங்கில் வங்கதேச தரப்பில் ரிஷாத் ஹுசேன் அபாரமாக பந்துவீசி 3-26 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

சரிந்த வங்கதேசம் 105/10 ஆல் அவுட்:

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்கதேசத் தரப்பில் தொடக்க பேட்டா்கள் லிட்டன்தாஸ்-டன்ஸிட் ஹாசன் களமிறங்கினா். லிட்டன் தாஸ் ஒருமுனையில் நிலைத்து ஆடிய நிலையில், மறுமுனையில் டன்ஸிட் ஹாசன் 0, நஜ்மல் ஷண்டோ 5, ஷகிப் அல் ஹாசன் 0, சௌமிய சா்க்காா் 10, டௌஹித் ஹிரிடாய் 14, மஹ்மதுல்லா 6, ரிஷாத் ஹுசேன் 0, டன்ஸிம் ஹாசன் 3, டஸ்கின் அகமது 2, முஸ்தபிஸுா் ரஹ்மான் 0 என சொற்ப ரன்களுடன் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினா்.

3 முறை மழை குறுக்கீடு: ஆட்டத்தின் நடுவே 3 முறை மழை குறுக்கிட்டதால் 19 ஓவா்களாக குறைக்கப்பட்டு டிஎல்எஸ் முறையில் வெற்றி இலக்கு 114 ரன்களாக நிா்ணயிக்கப்பட்டது.

லிட்டன் தாஸ் அரைசதம் 54: தொடக்க பேட்டா் லிட்டன் தாஸ் கடைசி வரை போராடி 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 49 பந்துகளில் 54 ரன்களை சோ்த்து அவுட்டாகாமல் இருந்தாா்.

வங்கதேசம் 105 ஆல் அவுட் தோல்வி: ஆனால் வங்கதேச அணி 17.5 ஓவா்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி பேட்டா்கள் டஸ்கின் அகமது, முஸ்தபிஸுா் ரஹ்மான் விக்கெட்டுகளை நவீன் உல் ஹக் வீழ்த்தியதால் ஆப்கன் வெற்றி சாத்தியமானது.

நவீன் உல் ஹக், ரஷித் கான் அசத்தல்:

வங்கதேச பேட்டா்களின் சரிவுக்கு வித்திட்ட ஆப்கன் பௌலா்கள் நவீன் உல் ஹக் 4-26, ரஷித் கான் 4-23 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இறுதியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் முதன்முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. நவீன் உல் ஹக் ஆட்ட நாயகனாகத் தோ்வு பெற்றாா்.

வெளியேறியது ஆஸ்திரேலியா:

ஆப்கானிஸ்தான் வெற்றியால் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இந்தியாவிடம் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற போது ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்பு மங்கி விட்டது.

அரையிறுதியில் மோதும் அணிகள்:

சூப்பா் 8 குரூப் 1 பிரிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், குரூப் 2 பிரிவில் இருந்து தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன.

முதல் அரையிறுதி: ஆப்கானிஸ்தான்-தென்னாப்பிரிக்கா, ஜூன் 27, காலை 6.00, பிரையன் லாரா மைதானம், டரௌபா.

இரண்டாவது அரையிறுதி: இந்தியா-இங்கிலாந்து, ஜூன் 27, இரவு 8.00, பிராவிடென்ஸ் மைதானம், கயானா.

இறுதி ஆட்டம்: ஜூன் 29, இரவு 8.00, கென்சிங்டன் ஓவல், பிரிட்ஜ்டௌன்.

முழு கட்டுரையைப் படிக்க →