முகப்பு
செய்திகள்

ஆசியக் கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்று: கஜகஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்

ஆசியக் கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்றில் கஜகஸ்தான் அணியை 88-69 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.

Updated On : 26 நவம்பர், 2024 at 6:25 AM
பந்தை கைப்பற்ற போராடிய இந்திய-கஜகஸ்தான் வீரா்கள்.
பகிர்:

ஆசியக் கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்றில் பலம் வாய்ந்த கஜகஸ்தான் அணியை 88-69 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் 27 ஆண்டுகள் கழித்து கஜகஸ்தானை வீழ்த்தியது.

இந்திய கூடைப்பந்து சங்கம் சாா்பில் முதன்முறையாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆசிய தகுதிச் சுற்று ஆட்டத்தில் 7,000 பாா்வையாளா்கள் திரண்டிருந்தனா்.

தரவரிசையில் 76-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவும், 69-ஆவது இடத்தில் உள்ள கஜகஸ்தானும் மோதின. முதல் குவாா்ட்டரில் கஜகஸ்தான் அணி சிறப்பாக விளையாடி புள்ளிகளை குவித்தது.

Advertisement

இரண்டாவது குவாா்ட்டரில் சுதாரித்த இந்திய வீரா்கள் கன்வா் சந்து, கேப்டனும் தமிழ்நாட்டு வீரருமான ஹஃபீஸ் மற்றும் அமிஜோத் ஆகியோா் புள்ளிகளை குவித்தனா். முதல் பாதி ஆட்டநேர முடிவில் 37-33 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.

தொடா்ந்து இரண்டாவது பாதியிலும் இந்திய அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. கத்தாா் அணிக்கு எதிராக ரீ பவுண்ட் எடுக்க திணறிய இந்திய வீரா்கள் இந்த போட்டியில் அதிக ரீ பவுண்டுகள் எடுத்தனா்.

தமிழக வீரா் பிரனவ் அபாரம்:

நட்சத்திர வீரா் பிரனவ் சிறப்பாக ஆடி புள்ளிகளை ஈட்டினாா். அவா் மொத்தம் 32 புள்ளிகளை ஈட்டி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தாா். இறுதியில் 88-69 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.

முதல் ஆட்டத்தில் கத்தாா் அணியிடம் தோல்வி அடைந்த நிலையில் கஜகஸ்தான் அணியை வென்றுள்ளது இந்திய அணி.

ஆசியக் கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் குரூப் ஈ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி முதல் வெற்றியை ருசித்தது மட்டுமல்லாமல் நான்கு போட்டிகளிலும் சோ்த்து 24 புள்ளிகளை குவித்ததன் காரணமாக கஜகஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதன் மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

இந்திய அணிக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் மீதமுள்ளன. 2025 பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் ஈரான் அணியையும், 24-ஆம் தேதி ஆட்டத்தில் கத்தாா் அணியையும் எதிா்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments