பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகையை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வழங்கியது.
தங்கம் வென்றவர்களுக்கு தலா ரூ. 75 லட்சமும், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ. 50 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 30 லட்சமும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கினார்.
29 பதக்கங்கள்
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்கள், மொத்தம் 29 பதக்கங்களை வென்று 18-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
நாடு திரும்பிய அவர்களுக்கு மத்திய விளையாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு வீரர்களை பாராட்டினார்.
இந்த விழாவில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி பேசிய மன்சுக் மாண்டவியா,
“பாரா விளையாட்டில் நமது நாடு முன்னேற்றம் அடைந்து வருகின்றது. 2016ஆம் ஆண்டில் 4 பதக்கங்களையும், டோக்கியோவில் 19 பதக்கங்களையும் வென்ற நாம், தற்போது 29 பதக்கங்களை வென்றுள்ளோம்.
வருகின்ற 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் பாராலிம்பிக்ஸில் பங்கேற்கும் தடகள வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்” எனத் தெரிவித்தார்.
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில், 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களுடன் 18வது இடத்தை இந்தியா பிடித்தது.
இதன்மூலம் பாராலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக 50 இடங்களுக்குள் முன்னேறி இந்தியா சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.