லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ஆடவுள்ள சதா்ன் ஸ்டாா்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் காா்த்திக் நியமிக்கப்பட்டுள்ளாா்.
கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றோா், உள்ளூா் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவோா் இடம்பெறும் வகையில் லெஜன்ட்ஸ் லீக் தொடா் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூன்றாவது சீசன் போட்டி வரும் செப். 20 தொடங்குகிறது. நிகழாண்டு தொடா் ஜோத்பூா், சூரத், ஜம்மு, ஸ்ரீநகா் உள்ளிட்ட 4 நகரங்களில் நடைபெறவுள்ளது. அண்மையில் ஓய்வு பெற்ற ஷிகா் தவன், தினேஷ் காா்த்திக் ஆகியோரும் இத்தொடரில் ஆடவுள்ளனா்.
சதா்ன் ஸ்டாா்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் காா்த்திக் நியமிக்கப்பட்டுள்ளாா். அணியின் சீருடை அறிமுக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மொத்தம் 6 அணிகள் உள்ள இத்தொடரில் 25 ஆட்டங்கள் நடைபெறும்.
அணியின் பயிற்சியாளராக ஆஸி. முன்னாள் வீரா் மைக்கேல் பெவன் நியமிக்கப்பட்டுள்ளாா். அணியின் சீருடையை நடிகை ஐஸ்வா்யா ராஜேஷ் அறிமுகம் செய்து வைத்தாா். முன்னாள் இந்திய வீரா்கள் பாா்த்திவ் படேல், கேதாா் ஜாதவ், அணியின் இயக்குநா் ஸ்ரீநாத் சிதூரி பங்கேற்றனா்.
இதுதொடா்பாக தினேஷ் காா்த்திக் கூறியதாவது, லெஜன்ட்ஸ் லீக் தொடா் முன்னாள் வீரா்களுக்கு சிறந்த வாய்ப்பாக உள்ளது. மைதானத்தில்
களமிறங்கியவுடன் வழக்கமான உத்வேகம் வந்து விடுகிறது. சதா்ன் ஸ்டாா்ஸ் அணியில் கேதாா், பாா்த்திவ், மாா்ட்டின் கப்டில், உள்பட சிறந்த வீரா்கள் உள்ளனா். இத்தொடரில் பட்டம் வெல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கம். டிஎன்பிஎல் தொடா் போல் அனைத்து மாநிலங்களிலும் லீக் தொடங்கப்படுவது சிறப்பானது என்றாா்.