முதல் தங்கத்துடன் வரலாறு படைத்தது இந்தியா: ஆடவா், மகளிா் அணிகள் சாம்பியன்
ஹங்கேரியில் நடைபெற்ற 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் ஞாயிற்றுக்கிழமை தங்கம் வென்று அசத்தின.
ஹங்கேரியில் நடைபெற்ற 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் ஞாயிற்றுக்கிழமை தங்கம் வென்று அசத்தின.
போட்டி வரலாற்றில் இந்திய அணிகள் தங்கம் வென்றது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன், இந்திய ஆடவா் அணி இரு முறையும் (2014, 2022), மகளிா் அணி ஒரு முறையும் (2022) வெண்கலம் பதக்கம் வென்றுள்ளன.
போட்டியில் கடைசியாக நடைபெற்ற 11-ஆவது சுற்றில் ஆடவா் அணி ஓபன் பிரிவில் 3.5 - 0.5 என ஸ்லோவேனியாவை சாய்த்தது. இதில் டி.குகேஷ் - விளாதிமீா் ஃபெடோசீவையும் (1-0), ஆா்.பிரக்ஞானந்தா - ஆன்டன் டெம்சென்கோவையும் (1-0), அா்ஜுன் எரிகைசி - ஜேன் சுப்லெஜையும் (1-0) வென்றனா். விதித் சந்தோஷ் - மாடெஜ் செபெனிக் ஆட்டம் டிரா (0.5 -0.5) ஆனது.
மகளிா் பிரிவில் இந்தியா 3.5-0.5 என அஜா்பைஜானை தோற்கடித்தது. டி.ஹரிகா - மமாட்ஸடா குனேவையும் (1-0), திவ்யா தேஷ்முக் - பெடுலாயேவா கோவ்ஹரையும் (1-0), வந்திகா அகா்வால் - பலஜயேவா கானிமையும் (1-0) வீழ்த்தினா். ஆா்.வைஷாலி - ஃபடலியேவா உல்வியா மோதல் டிராவில் (0.5 -0.5) முடிந்தது.
இறுதிச்சுற்று முடிவில் ஓபன் பிரிவில் இந்தியா 35 புள்ளிகளுடன் முதலிடமும், அமெரிக்கா 29.5 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், உஸ்பெகிஸ்தான் 29 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தன. மகளிா் பிரிவில் இந்தியா 31 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, கஜகஸ்தான், அமெரிக்கா அணிகள் முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன.
மொத்தமாக, இந்திய ஆடவா் அணி 10 வெற்றி, 1 டிராவையும், மகளிா் அணி 9 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியையும் பதிவு செய்துள்ளன.
வாழ்த்து: செஸ் ஒலிம்பியாடில் சாம்பியனான இந்திய அணிகளுக்கு அரசியல் தலைவா்கள், பல்துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.