புடாபெஸ்ட்: செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக்கிறது இந்தியா.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தங்கம் வெல்வது இது முதல் முறையாக இருக்க, அதையும் சாதனையுடன் வென்றிருக்கிறது.
இதற்கு முன், சீனா மற்றும் முந்தைய சோவியத் யூனியன் மட்டுமே இவ்வாறு இரு பிரிவுகளிலும் சாம்பியனாகியுள்ளன.
அணிகள் பிரிவில் இந்திய ஆடவர், மகளிருக்கு கிடைத்த தங்கம் போக, தனிநபராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ஆடவர் பிரிவில் டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி ஆகியோருக்கும், மகளிர் பிரிவில் திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால் ஆகியோருக்கும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
மேலும், இந்தியாவின் இரு அணிகளுக்கும் கூட்டாக "நோனா கப்ரின்டாஷ்விலி' கோப்பையும் வழங்கப்பட்டது. போட்டியில் ஓபன் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் இந்தியாவே சிறப்பாக செயல்பட்டதை அடுத்து அவற்றுக்கு இந்தக் கோப்பை வழங்கப்பட்டது.
வெற்றிக்குப் பிறகு இந்திய வீரர் டி.குகேஷ் பேசுகையில், "தனிப்பட்ட முறையில் எனது ஆட்டமும், ஒரு அணியாக நாங்கள் இணைந்து விளையாடியதும் திருப்தி அளிக்கிறது. முந்தைய போட்டிகளில் சாம்பியனாகும் வாய்ப்பை நெருங்கி வந்து தோற்ற நிலையில், இந்த முறை கோப்பையை கைப்பற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி.
இறுதிச்சுற்றுக்கு முன்பாகவே நாங்கள் கொண்டாட்ட மனநிலையில் தான் இருந்தோம். பின்னர் நாங்களே எங்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து ஒருமுகப்படுத்தி இறுதிச்சுற்றில் விளையாடினோம். அந்தச் சுற்றில் தோற்றாலும் டை பிரேக்கரில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் இறுதிச்சுற்றிலேயே வென்றுவிட்டோம்.
கடந்த முறை தங்கத்தை நெருங்கி தோற்றதால், இந்த முறை நிச்சயம் அணிக்காக தங்கம் வென்று தீர வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன். எனவே, எனது தனிப்பட்ட ஆட்டத்தில் கவனம் செலுத்துவதை விடுத்து, அணிக்குத் தேவையானதை கவனத்தில் கொண்டு விளையாடினேன். ஒழுங்கான நிலையில், ஒருமுகப்படுத்தி விளையாடுகையில், ஒரு கட்டத்துக்குப் பிறகு இயல்பாகவே நன்றாக விளையாடத் தொடங்கிவிடுவோம்.
முதல் நான்கு சுற்றுகளில் வென்றதை அடுத்தே, இந்தப் போட்டி சிறப்பாக அமையும் என்று எண்ணினேன்' என்றார்.
மகளிர் பிரிவில் மூத்த வீராங்கனையான டி.ஹரிகா கூறுகையில், "அணியில் இருக்கும் இதர இந்தியர்களை விட எனக்கு இந்த வெற்றிக் கோப்பை உணர்வுப்பூர்வமானதாகும். இந்தத் தங்கத்தை வெல்வதற்காக கடந்த 20 ஆண்டுகளாக முயற்சித்து வந்த நிலையில், தற்போது அது கைகூடியிருக்கிறது.
அணியிலிருக்கும் இளம் வீராங்கனைகளின் விளையாட்டை பார்த்து பெருமை கொள்கிறேன்.
எனது ஆட்டம் சற்று திருப்தி அளிக்கவில்லை என்றாலும், அணியாக தங்கம் வென்றது அதை கடந்துபோகச் செய்கிறது' என்றார்.
மகளிர் அணியின் வெற்றிக்கு முக்கியமாக பங்களித்த திவ்யா தேஷ்முக் பேசுகையில், "போட்டியின் தொடக்கநிலை சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்டாலும், இடையே சற்று தடுமாறினோம். அதை நானும், அணியினரும் தகுந்த முறையில் கையாண்டு மீண்டும் முன்னேறியது திருப்தி அளிக்கிறது.
உறுதியுடன் போராடி தங்கம் வென்றிருக்கிறோம். நமது நாட்டுக்காக விளையாடுகிறோம் என்று வரும்போது முழு அர்ப்பணிப்புடன் விளையாடுகிறோம்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.