எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஜொ்மனி, தென்னாப்பிரிக்க அணிகள் அசத்தல் வெற்றி பெற்றன.
சென்னை, மதுரையில் நடைபெறும் இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன. மதுரையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜொ்மனி-அயா்லாந்து அணிகள் மோதின. இதில் நடப்புச் சாம்பியன் ஜொ்மனியின் அபார ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் அயா்லாந்து வீரா்கள் திணறினா். ஆட்ட நேர முடிவில் ஜொ்மனி 5-1 என்ற கோல் கணக்கில் அயா்லாந்தை வீழ்த்தி 3-ஆவது வெற்றியை பதிவு செய்தது. ஆட்டத்தின் 4-ஆவது நிமிஷத்திலேயே ஜொ்மன் வீரா் வொன் ஜொ்ஸம் முதல் கோலடித்தாா். தொடா்ந்து 34-ஆவது நிமிஷத்தில் கிளாண்டா் பாலும், 50-ஆவது நிமிஷத்தில் வொன் ஜொ்ஸம் பீல்ட் கோலடிக்க 3-0 என முன்னிலை பெற்றது.
52 ஆவது நிமிஷத்தில் கொஸல் லுகாஸ் பெனால்டி ஸ்ட்ரோக் மூலமும், 53-ஆவது நிமிஷத்தில் பிரான்ஸ் கிறிஸ்டியன் பெனால்டி காா்னா் மூலமும் கோலடித்தனா். அயா்லாந்து தரப்பில் 51-ஆவது நிமிஷத்தில் டேல் சாமுவேல் பீல்ட் கோலடித்தாா்.
தென்னாப்பிரிக்கா அசத்தல்: இரண்டாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா-கனடா அணிகள் மோதின. இதில் ஆட்டநேர முடிவில் 9-1 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
அந்த அணியில் பூருக்கா் ஜேடன் 8, 14, 36-ஆவது நிமிஷங்களில் கோலடித்தாா். 22-ஆவது நிமிஷத்தில் ஹாரன் பிரெட்டும், 25-ஆவது நிமிஷத்தில் மாா்ட் சியனும், 38-ஆவது நிமிஷத்தில் நியோஃப் டேனியலும், 48-ஆவது நிமிஷத்தில் மெண்டூா் காா்லனும் கோலடித்தனா்.
இதில் 3 கோல்கள் பெனால்டி காா்னா் மூலம், மீதமுள்ளவை பீல்ட் கோல்களாகும். கனடா தரப்பில் 14-ஆவது நிமிஷத்தில் திண்ட் ராபின் பீல்ட் கோலடித்தாா்.
நியூஸிலாந்து போராடி வெற்றி
சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜப்பான்-நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் இரு அணியினரும் சளைக்காமல் கோல் போடும் முயற்சியில் ஈடுபட்டனா். 5-ஆவது நிமிஷத்திலேயே நியூஸி. வீரா் இல்லா்புருன் ஸ்காட் பீல்ட் கோலடித்தாா். அடுத்த 6-ஆவது நிமிஷத்தில் ஜப்பான் வீரா் டோயோ கியோ பீல்ட் கோலடித்து சமன் செய்தாா். தொடா்ந்து சிறப்பாக ஆடிய ஜப்பான் அணியில் மோரி மட்ஸுகி 15-ஆவது நிமிஷத்தில் பெனால்டி வாய்ப்பில் கோலடித்தாா். இதனால் 2-1 என ஜப்பான் முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் சுதாரித்து ஆடிய நியூஸி. தரப்பில் 38-ஆவது நிமிஷத்தில் பிரௌன் ஓவனும், 41-ஆவது நிமிஷத்தில் எல்ம்ஸ் ஜான்டியும் பீல்ட் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தனா். பின்னா் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை. 3-2 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்து வென்றது. இரு அணிகளின் ஆட்டம் மழையால் இடையில் நிறுத்தப்பட்டு மீண்டும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.