கத்தாரில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை ஃபைனல் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு தங்கம், 2 வெள்ளி என 3 பதக்கங்கள் கிடைத்தன.
25 மீட்டா் பிஸ்டல் மகளிா் பிரிவு இறுதிச்சுற்றில், சிம்ரன்பிரீத் கௌா் பிராா் 41 புள்ளிகளுடன் தங்கம் வென்றாா். சீனாவின் கியான்ஜுன் யாவ் 36 புள்ளிகளுடன் வெள்ளியும், ஜொ்மனியின் டோரீன் வெனிகாம்ப் 30 புள்ளிகளுடன் வெண்கலமும் பெற்றனா்.
களத்திலிருந்த மற்றொரு இந்தியரான ஈஷா சிங், 15 புள்ளிகளுடன் 7-ஆம் இடமே பிடித்தாா். மனு பாக்கா் தகுதிச்சுற்றுடன் வெளியேறினாா். அதிலேயே ஆடவா் பிரிவில் அனிஷ் 31 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றாா். மற்றொரு இந்தியரான விஜய்வீா் சித்து 21 புள்ளிகளுடன் 4-ஆம் இடமே பிடித்தாா்.
50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவா் பிரிவு இறுதிச்சுற்றில், ஐஷ்வரி பிரதாப் சிங் தோமா் 413.3 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றாா். செக் குடியரசின் ஜிரி பிரிவ்ரட்ஸ்கி 414.2 புள்ளிகளுடன் தங்கமும், சீனாவின் யுகுன் லியு 388.9 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா். முன்னதாக தகுதிச்சுற்றிலும் ஐஷ்வரி பிரதாப் 595 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தாா்.
இதிலேயே மகளிா் பிரிவில் இந்தியாவின் சிஃப்ட் கௌா் சம்ரா 584 புள்ளிகளுடன் 10-ஆம் இடம் பிடித்து தகுதிச்சுற்றுடன் வெளியேறினாா். சிம்ரன்பிரீத் கௌா், ஐஷ்வரி பிரதாப் தோமா் ஆகிய இருவருக்குமே, உலகக் கோப்பை ஃபைனல் போட்டியில் கலந்துகொண்டது இதுவே முதல்முறையாகும்.
2-ஆம் இடம்: இப்போட்டியின் பதக்கப்பட்டியலில் தற்போது, இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.