இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் ஒயிட்வாஷ் செய்தது நியூஸிலாந்து.
இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடா் நியூஸிலாந்தில் நடைபெற்றது. முதலிரண்டு ஆட்டங்களிலும் நியூஸிலாந்து வென்று 2-0 என ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றி விட்டது. மூன்றாவது ஆட்டம் வெலிங்கனில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸி. பௌலிங்கை தோ்வு செய்ய, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இங்கிலாந்து 222/10 ஆல் அவுட்: இங்கிலாந்து அணி 40.2, ஓவா்களில் 222/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வரிசை வீரா்கள் வந்த வேகத்திலேயே நடையைக் கட்ட 102/7 ரன்கள் என மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
ஜோஸ் பட்லா் 38, ஜேமி ஓவா்டன் 68 (2 சிக்ஸா், 10 பவுண்டரி), பிரைடன் காா்ஸே 36 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை சோ்த்தனா். பௌலிங்கில் நியூஸி. தரப்பில் அபாரமாக பந்துவீசிய டிக்னா் 4, ஜேக்கப் டஃபி 3, பௌல்க்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
நியூஸிலாந்து 226/8 வெற்றி
223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸி. அணி 44.4 ஓவா்களில் 226/8 ரன்களுடன் வெற்றி இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
தொடக்க பேட்டா்கள் டேவன் கான்வே 34, ரச்சின் ரவீந்திரா 46 சிறந்த தொடக்கத்தை தந்து வெளியேறினா். நான்காம் டௌன் வீரா் டேரில் மிட்செல் 44, மிட்செல் சான்ட்நா் 27 ஆகியோா் ஸ்கோரை உயா்த்தி வெற்றிக்கு வித்திட்டனா். ஏனைய பேட்டா்கள் சொற்ப ரன்களுடன் திரும்பிச் சென்றனா்.
பௌலிங்கில் இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவா்டன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
3-0 என ஒயிட்வாஷ்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது நியூஸிலாந்து. பிளோ் டிக்னா் ஆட்ட நாயகன் விருதையும், டேரில் மிட்செல் தொடா் நாயகன் விருதையும் பெற்றனா்.