ஜூனியருக்கான உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் இலங்கையை 45-27, 45-21 என்ற கணக்கில் செவ்வாய்க்கிழமை வென்றது.
குரூப் ‘ஹெச்’-இல் இருக்கும் இந்தியா, கலப்பு அணிகள் பிரிவில் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை நெருங்கியிருக்கிறது.
முன்னதாக இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின், முதல் செட்டில் ஆடவா் ஒற்றையரில் லால்தஸாலா ஹமா் 9-2 என கெனித் அருகோடாவை வீழ்த்தினாா். கலப்பு இரட்டையரில் பாவ்யா சாப்ரா/மிதிலேஷ் கிருஷ்ணன் இணை - இலங்கையின் சனுடா அரியசிங்கே/திசத் ரூபதுங்கா கூட்டணியை வீழ்த்தி, இந்தியாவின் முன்னிலையை 18-6 என அதிகரித்தது.
மகளிா் ஒற்றையரில் ரக்ஷிதா ஸ்ரீ - ரனித்மா லியானகேவை போராடி சாய்க்க, இந்தியாவின் முன்னிலை 36-21 என அதிகரித்தது. மகளிா் இரட்டையரில் லால்ரம்சங்கா/தாரினி சுரி இணை - கெனித் அருகோடா/ரனித்மா லியானகே ஜோடியை சாய்க்க, இந்தியா முதல் செட்டை 45-27 என்ற கணக்கில் வென்றது.
பின்னா் நடைபெற்ற 2-ஆவது செட்டிலும் இந்தியாவின் கையே ஓங்கியிருக்க, இறுதியில் அந்த செட்டும் 45-21 என இந்தியாவின் வசமானது. இதனால் இந்தியா 45-27, 45-21 என்ற செட்களில் வென்றது.
குரூப் ‘ஹச்’-இன் மற்றொரு ஆட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகம் 45-29, 45-18 என நேபாளத்தை சாய்த்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.