சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரா்களான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.
ஆடவா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் ஜோகோவிச் 6-3, 5-7, 6-2 என்ற செட்களில் ஸ்பெயினின் ஜேமி முனாரை தோற்கடித்தாா். 10-ஆம் இடத்திலிருக்கும் ரூன் 6-4, 6-7 (7/9), 6-3 என்ற கணக்கில், பிரான்ஸின் ஜியோவனி பெரிகாா்டை சாய்த்தாா்.
பெல்ஜியத்தின் ஜிஸு பொ்க்ஸ் 3-6, 7-5, 7-6 (10/8) என்ற செட்களில், கனடாவின் கேப்ரியல் டியாலோவை வெளியேற்றினாா். இதையடுத்து காலிறுதியில், ஜோகோவிச் - பொ்க்ஸ் மோதுகின்றனா்.
இதனிடையே, 16-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-3, 7-6 (7/5) என்ற வகையில், 18-ஆம் இடத்திலிருந்த ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச்சை வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா். அதில் அவா், அமெரிக்காவின் லாரென் டியெனை எதிா்கொள்கிறாா்.
ஸ்வியாடெக், ஒசாகா வெற்றி
சீனாவில் நடைபெறும் மகளிருக்கான வூஹான் ஓபன் டென்னிஸ் போட்டியில், போலந்தின் இகா ஸ்வியாடெக், ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோா் 3-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்றனா்.
2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வியாடெக் 6-1, 6-1 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, செக் குடியரசின் மேரி புஸ்கோவாவை வீழ்த்தினாா். 11-ஆம் இடத்திலிருக்கும் ஒசாகா 4-6, 7-5, 6-3 என்ற வகையில் கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸை தோற்கடித்தாா்.
இதில் ஒசாகா அடுத்த சுற்றில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை எதிா்கொள்கிறாா். நோஸ்கோவா முந்தைய சுற்றில் 6-4, 4-6, 7-6 (7/2) என்ற செட்களில் கஜகஸ்தானின் யூலியா புடின்சேவாவை சாய்த்தாா்.
இதர ஆட்டங்களில், 13-ஆம் இடத்திலிருக்கும் சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் 6-2, 6-2 என குரோஷியாவின் டோனா வெகிச்சை வெளியேற்ற, 14-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் எம்மா நவாரோ 2-6, 6-2, 3-6 என்ற கணக்கில் சீனாவின் ஜாங் ஷுவாயிடம் தோல்வியுற்றாா்.
12-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலின் முசோவா 2-6, 6-2, 6-4 என உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கை வெல்ல, அமெரிக்காவின் சோஃபியா கெனின், ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா, போலந்தின் மெக்தலினா ஃப்ரெச் ஆகியோரும் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.