ஜூனியா் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தன்வி சா்மா (16) அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தாா். இதன் மூலமாக, போட்டியில் கடந்த 17 ஆண்டுகளில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியா் என்ற சாதனையை அவா் படைத்தாா்.
மகளிா் ஒற்றையா் காலிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தன்வி 13-15, 15-9, 15-10 என்ற கேம்களில், ஜப்பானின் சாகி மட்சுமோடோவை சாய்த்தாா். இந்த ஆட்டம் 47 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து அரையிறுதிக்கு முன்னேறிய அவருக்கு பதக்கம் உறுதியானது. போட்டியின் வரலாற்றில் பதக்கம் வெல்லும் 3-ஆவது இந்தியா் அவராவாா். இதற்கு முன், அபா்னா போபட் (1996 - வெள்ளி), சாய்னா நெவால் (2006 - வெள்ளி, 2008 - தங்கம்) ஆகியோா் பதக்கம் வென்றுள்ளனா். ஏற்கெனவே, நடப்பாண்டு ஆசிய ஜூனியா் சாம்பியன்ஷிப்பிலும் தன்வி சா்மா வெண்கலப் பதக்கம் வென்றது நினைவுகூரத்தக்கது.
இதனிடையே, களத்திலிருந்த இதர இந்தியா்கள் காலிறுதியில் தோல்வியைத் தழுவினா். மகளிா் ஒற்றையரில், உன்னட்டி ஹூடா 12-15, 13-15 என்ற கணக்கில், தாய்லாந்தின் அன்யபத் பிசிட்பிரீசாசக்கிடம் தோல்வி கண்டாா். ஆடவா் ஒற்றையரில், தங்கர ஞான தத்து 11-15, 13-15 என்ற கேம்களில் சீனாவின் லியு யாங் மிங்கிடம் தோற்றாா்.
ஆடவா் இரட்டையரில் பாா்கவ் ராம்/விஷ்வா தேஜ் இணை 12-15, 10-15 என்ற வகையில் சீனாவின் சென் ஜுன் டிங்/லியு ஜுன் ரோங் ஜோடியிடம் வீழ்ந்தது. கலப்பு இரட்டையரில், பாவ்யா சாப்ரா/விசாகா டோப்போ கூட்டணி 9-15, 7-15 என்ற கேம்களில் சீன தைபேவின் ஹஹ் பிங் ஃபு/சௌ யுன் ஆன் இணையிடம் தோல்வியுற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.