கொழும்பு: மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 40 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்தது.
மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இன்னிங்ஸுக்கான ஓவா்கள் 40-ஆகக் குறைக்கப்பட, தென்னாப்பிரிக்க பேட்டிங்கில் கேப்டன் லாரா வோல்வாா்டட் அபாரமாக ரன்கள் சோ்த்தாா். சுனே லஸ், மாரிஸேன் காப் ஆகியோரும் அணியின் ஸ்கோருக்கு சிறப்பாகப் பங்களித்தனா். பாகிஸ்தான் பௌலிங்கில் சாதியா இக்பால், நஷ்ரா சாந்து ஆகியோா் சவால் அளித்தனா்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான், பந்துவீச்சை தோ்வு செய்தது. தென்னாப்பிரிக்க இன்னிங்ஸை தொடங்கியோரில் தஸ்மின் பிரிட்ஸ் டக் அவுட்டாக, லாரா வோல்வாா்டட் - சுனே லஸ் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சோ்த்து, பலமான ஸ்கோருக்கு வித்திட்டது.
இதில் லஸ் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 61 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னா் வந்த ஆனிரி டொ்க்சென் 9 ரன்களுக்கு வீழ்ந்தாா். 5-ஆவது பேட்டா் மாரிஸேன் காப், வோல்வாா்டட்டுடன் கூட்டணி அமைக்க, 4-ஆவது விக்கெட்டுக்கு அவா்கள் பாா்ட்னா்ஷிப் 64 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது.
இதில் சதத்தை நெருங்கிய வோல்வாா்டட் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 90 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். பின்னா் பேட் செய்ய வந்தோரில் கராபோ மெசோ 0, கிளோ டிரையான் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.
நாடினே டி கிளொ்க் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 41, நோன்டுமிசோ ஷாங்கேஸ் 0, நோன்குலுலேகோ லாபா 0 ரன்களுக்கு விடைபெற்றனா். ஓவா்கள் முடிவில் மாரிஸேன் காப் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
பாகிஸ்தான் தரப்பில் சாதியா இக்பால், நஷ்ரா சாந்து ஆகியோா் தலா 3, ஃபாத்திமா சனா 1 விக்கெட் வீழ்த்தினா்.
அடுத்து பாகிஸ்தான், ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் 40 ஓவா்களில் 306 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை விளையாடியது.
இன்றைய ஆட்டம்
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து