அமெரிக்காவில் நடைபெறும் கிளட்ஸ் செஸ் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், வெற்றியைப் பதிவு செய்யாமல் நிறைவு செய்தார் இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி. குகேஷ்.
முதல் நாள் போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்த குகேஷ், நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் (நம்பா் 1) உடனான போட்டியில் வீழ்ந்தார். அமெரிக்காவின் ஹிகரு நகமுரா (2) உடன் நடந்த போட்டியை டிராவில் நிறைவு செய்தார். நேற்றைய போட்டியில் குகேஷ் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது ஊடகங்களில் வைரலாகியிருந்தது.
பிறகு ஃபாபியானா கரானாவுடனான முதல் போட்டியை இழந்து, இரண்டாவது போட்டியை டிரா செய்திருந்தார் குகேஷ்.
இதனால், இரண்டாம் நாள் ஆட்டத்தின் நிறைவில், 7 புள்ளிகளுடன் நகமுராவுடன் கடைசி இடத்தில் உள்ளார் குகேஷ். கார்ல்சன் 11.5 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் கரானா 10.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
முதல் நாள் ஆட்டத்தில்!
அமெரிக்காவில் நடைபெறும் கிளட்ச் செஸ் போட்டியின் ரேபிட் சுற்று ஆட்டத்தில் இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹிகரு நகமுராவை வீழ்த்தியிருந்தார்.
இது வெறும் விளையாட்டுப் போட்டி வெற்றியாக மட்டுமல்லாமல், கடந்த வாரம் அமெரிக்கா - இந்தியா கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குகேஷை செஸ் போட்டியில் வீழ்த்திய நகமுரா, குகேஷின் ராஜாவை பார்வையாளர்கள் பக்கமாக தூக்கி வீசிய சம்பவம் அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.
அப்போதே, நகமுராவுக்கு எதிராகக் கருத்துகள் எழுந்திருந்த நிலையில், தற்போது நடந்த இந்தப் போட்டியில், குகேஷ் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
முதல் நாள் போட்டியின் இரண்டாவது சுற்றில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ், கடும் போராட்டத்துக்கு இடையே வெற்றி பெற்றார். ஏற்கனவே நகமுரா செய்த மோசமான செயல், குகேஷ் நினைவில் இருந்து அகலாமால் இருந்திருக்கலாம். ஆனாலும் அதனை துளியும் வெளிப்படுத்தாமல் நகமுரா கைகுலுக்க நீட்டியபோது, சற்றும் யோசிக்காமல் குகேஷ் கைகுலுக்கினார். இதைப் பார்த்த மக்கள் நெகிழ்ந்து போயினர்.
பிறகும் கூட, அவர் அந்த மேஜையிலிருந்து வெளியேறாமல், தான் விளையாடிய காய்களை மட்டுமல்லாமல், நகமுராவின் காய்களையும் முறைப்படி அடுக்கி வைத்தார். போட்டி ஏற்பாட்டாளர்கள், தாங்கள் அதனை செய்துகொள்வதாகக் கூறிய பிறகும், முழுமையாக அடுக்கிவைத்துவிட்டு, தனது மேல் கோட்டை எடுத்துக் கொண்டு மேடையிலிருந்து எந்த சலனமும் இல்லாமல் வழக்கமான அமைதியுடன் வெளியேறினார்.
இதை அங்கிருந்து பார்த்தவர்களும், ஊடகங்கள் வாயிலாகப் பார்த்தவர்களும், குகேஷ் தன்னுடைய பாணியில் நகமுராவுக்கு பதிலடி கொடுத்துவிட்டதாகப் புகழ்ந்தனர்.
நடப்பு உலக சாம்பியன் மற்றும் உலகின் டாப் 3 போட்டியாளா்களான இந்தியாவின் குகேஷ், நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் (நம்பா் 1), அமெரிக்காவின் ஹிகரு நகமுரா (2), ஃபாபியானா கரானா ஆகியோா் இதில் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிக்க.. சென்னையில் ஒரு சொட்டு மழை இருக்காதா? நவ. 5 வரையிலான நிலவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.