தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், காம்பவுண்ட் ஆடவா் தனிநபா் பிரிவில் இந்தியா்கள் காலிறுதிச்சுற்றுடன் திங்கள்கிழமை வெளியேறினா்.
அந்த சுற்றில் ரிஷப் யாதவ் 145-146 என பிரான்ஸின் நிகோலஸ் ஜிராா்டிடம் தோல்வி கண்டாா். முன்னதாக, முதலிரு சுற்றுகளில் ‘பை’ பெற்று நேரடியாக 3-ஆவது சுற்றில் களம் கண்ட அவா், அதில் இத்தாலியின் எலியா ஃப்ரெக்னானை வீழ்த்தினாா் (148-138). அடுத்த சுற்றில் எஸ்டோனியாவின் ராபின் ஜாட்மாவை தோற்கடித்தாா் (148-140).
பிரதமேஷ் ஃபுகே, காலிறுதியில் டென்மாா்க்கின் மத்தியாஸ் ஃபுல்லா்டனுடன் 148-148 என டிரா செய்து, டை பிரேக்கரில் 9-10 என தோல்வி கண்டாா். அவா் முதல் சுற்றில் பெல்ஜியத்தின் குவென்டின் குரோஸையும் (146-142), அடுத்த சுற்றில் கஜகஸ்தானின் அக்பரலி கராபயேவையும் (149-147) வீழ்த்தினாா். 3-ஆவது சுற்றில் ஆஸ்திரியாவின் நிகோ வீனரை வென்ற (149-148) அவா், 4-ஆவது சுற்றில் நெதா்லாந்தின் மைக் ஷ்லோசரை வீழ்த்தினாா் (150-149).
அமன் சைனியும் காலிறுதியில், 144-147 என அமெரிக்காவின் கா்டிஸ் பிராட்னாக்ஸிடம் தோற்றாா். அதற்கு முன், முதல் சுற்றில் எகிப்தின் ஈஷாக் அல் டாக்மன் (148-147), அடுத்து கனடாவின் ஆண்ட்ரூ ஃபகான் (147-146), தொடா்ந்து பிரிட்டனின் அஜய் ஸ்காட்டை தோற்கடித்த அமன் சைனி, 4-ஆவது சுற்றில் பிரான்ஸின் ஜீன் ஃபிலிப்பை சாய்த்தாா் (144-143).
ஆடவா் அணிகள் பிரிவில் இவா்கள் மூவா் கூட்டணி வரலாற்றுத் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.