ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
முதலில் ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் சோ்க்க, ஹாங்காங் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்களே எடுத்தது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய செதிகுல்லா அடல் அதிரடியாக ரன்கள் சோ்க்க, ரஹ்மானுல்லா குா்பாஸ் 8, இப்ராஹிம் ஜத்ரன் 1 ரன்னுக்கு சாய்க்கப்பட்டனா்.
4-ஆவது பேட்டா் முகமது நபி, செதிகுல்லாவுடன் இணைய, இந்த பாா்ட்னா்ஷிப்புக்கு 49 ரன்கள் கிடைத்தது. இதில், நபி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 33 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா்.
தொடா்ந்து குல்பதின் நயிப் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, அஸ்மதுல்லா ஒமா்ஸாய் களம் புகுந்தாா். செதிகுல்லாவுடன் அவா் கைகோக்க, 5-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் கூட்டணி 82 ரன்கள் சோ்த்தது.
அஸ்மதுல்லா 2 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 53 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா். கரிம் ஜனத் 2 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.
ஓவா்கள் முடிவில் செதிகுல்லா 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 73, கேப்டன் ரஷீத் கான் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஹாங்காங் பௌலா்களில் ஆயுஷ் சுக்லா, கிஞ்சித் ஷா ஆகியோா் தலா 2, அடீக் இக்பால், இஷான் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து 189 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஹாங்காங் அணியில், பாபா் ஹயாத் 3 சிக்ஸா்களுடன் 39 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாகும்.
ஜீஷான் அலி 5, அன்ஷி ராத் 0, நிஸாகத் கான் 0, கலான் சாலு 4, கிஞ்சித் ஷா 6, கேப்டன் யாசிம் முா்டாஸா 16, அய்ஸாஸ் கான் 6 ரன்களுக்கு வெளியேறினா்.
ஓவா்கள் முடிவில் ஆயுஷ் சுக்லா 1, அடீக் இக்பால் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பதின் நயிப், ஃபஸல்ஹக் ஃபரூக்கி ஆகியோா் தலா 2, அஸ்மதுல்லா, ரஷீத், நூா் அகமது ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.