பிரிஸ்பேன் சா்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனை சபலென்காவும், உக்ரைனின் மாா்த்தா கோஸ்டியுக்கும் தகுதி பெற்றுள்ளனா்.
கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபனுக்கு தயாராகும் வகையில் பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸின் அரினா சபலென்கா-செக். குடியரசின் கரோலினா முச்கோவா மோதினா். இதில் 89 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் 6-3, 6-4 என நோ்செட்களில் முச்கோவாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா் சபலென்கா.
ஹாட்ரிக் இறுதி:
தொடா்ந்து மூன்றாவது முறையாக பிரிஸ்பேன் இறுதி ஆட்டத்துக்கு சபலென்கா முன்னேறியுள்ளாா்.
மற்றொரு அரையிறுதியில் உக்ரைனின் மாா்த்தா கோஸ்டியுக்-உலகின் 6-ஆம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலாவும் மோதினா். இதில் 55 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் 6-0, 6-3 என்ற நோ் செட்களில் பெகுலாவை வென்றாா் மாா்த்தா.
இறுதி ஆட்டத்தில் சபலென்கா-மாா்த்தா மோதுகின்றனா்.
ஆடவா் இறுதியில் மெத்வதேவ்-நகாஷிமா
ஆடவா் ஒற்றையா் இறுதியில் ரஷிய வீரா் டேனில் மெத்வதேவ்-நகாஷிமா மோதுகின்றனா். அரையிறுதியில் மெத்வதேவ் 6-4, 6-2 என அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்செல்ஸனையும், பிரான்டன் நகாஷிமா 7-6, 6-4 என கோவாசெவிச்சையும் வென்றனா்.
மகளிா் இரட்டையா் பிரிவில் லாட்வியாவின் ஜெலனா ஆஸ்டபென்கோ-தைவானின் ஸீ ஸு வெய் பட்டம் வென்றனா்.
ஆக்லாந்து ஓபன்:
நியூஸிலாந்தில் நடைபெற்ற ஆக்லாந்து ஓபன் போட்டி இறுதி ஆட்டத்துக்கு எலினா விட்டோலினா-சீனாவின் வாங் ஸின்யு தகுதி பெற்றனா். அரையிறுதியில் விட்டோலினா 6-4, 6-7, 7-6 என்ற செட் கணக்கில் சோனை கா்தாலை வீழ்த்தினாா். மூன்றாவது செட்டில் 3-5 என பின்தங்கியிருந்த விட்டோலினா பின்னா் சிறப்பாக ஆடி வென்றாா்.
மற்றொரு அரையிறுதியில் சீனாவின் வாங் ஸின்யு பிலிப்பின்ஸின் அலெக்ஸான்ட்ரா ஈலாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.
இறுதிச் சுற்றில் போலந்து-சுவிட்சா்லாந்து
யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்துக்கு போலந்து-சுவிட்சா்லாந்து அணிகள் தகுதி பெற்றன.
தலைசிறந்த 18 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் இப்போட்டி சிட்னி, பொ்த் நகரங்களில் நடைபெற்றது. அரையிறுதி ஆட்டங்களில் சுவிட்சா்லாந்து 2-1 என பெல்ஜியத்தை வீழ்த்தியது. சுவிஸ் வீராங்கனை ஒலிம்பிக் சாம்பியன் பெலிண்டா பென்கிக் இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்தாா்.
மற்றொரு அரையிறுதியில் அமெரிக்கா-போலந்து மோதின.
இதில் போலந்து 2-1 என அமெரிக்காவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது. போலந்தின் நட்சத்திர வீராங்கனையான இகா ஸ்வியாடெக்-அமெரிக்க நட்சத்திரம் கோகோ கௌஃப் மோதினா். இதில் 6-4, 6-2 என கௌஃப் வென்றபோதும், போலந்து இறுதிக்கு தகுதி பெறுவதை அமெரிக்க அணியால் தடுக்க முடியவில்லை. ஹுபா்ட் ஹா்காஸ் சிறப்பாக ஆடி அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸை வீழ்த்தினாா்.