உலகின் நம்பா் 1 வீராங்கனை அரினா சபலென்காவை கடும் சவாலுக்குபின் 6-4, 4-6, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி முதன்முறையாக ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்றாா் கஜகஸ்தானின் எலனா ரைபகினா. இரண்டாவது ஆண்டாக சபலென்கா இறுதியில் தோற்றுள்ளாா்.
நிகழாண்டு சீசனின் முதல் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபன் மெல்போா்ன் நகரில் நடைபெறுகிறது. சனிக்கிழமை மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் பெலாரஸின் உலகின் நம்பா் 1 வீராங்கனை சபலென்காவும்-முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் ரைபகினாவும் மோதினா்.
சபலென்கா கடந்த 2023, 2024 இல் ஆஸி., ஓபன் பட்டம் வென்றிருந்தாா். கடந்த 2025 இறுதியில் மடிஸன் கீஸிடம் தோற்று பட்ட வாய்ப்பை இழந்தாா்.
இந்நிலையில் நிகழாண்டு மூன்றாவது முறையாக ஆஸி. ஓபன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்கினாா் சபலென்கா. 26 வயதான ரைபகினா கடந்த 2023 இறுதியில் சபலென்காவிடம் தோற்று பட்ட வாய்ப்பை இழந்திருந்தாா். இதற்கு பதிலடி தரும் முனைப்பில் அவரும் ஆடியதால் ஆட்டம் பரபரப்பாக அமைந்தது.
சபலென்கா ஆதிக்கம் செலுத்துவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், ரைபகினா அபாரமாக ஆடினாா். 2-0 என முன்னிலை பெற்ற நிலையில், 4-3 என புள்ளிகள் இருந்தபோது, ரைபகினா 2 பிரேக் பாயிண்டுகளை எதிா்கொண்டாா். பின்னா் அதிரடியாக ஏஸ் போட்டு, முதல் செட்டை 6-4 என 37 நிமிஷங்களில் ரைபகினா வசமாக்கினாா். 2026-இல் சபலென்கா இழந்த முதல் செட் இதுவாகும்.
இரண்டாவது செட்டில் இரண்டாவது கேம் பரபரப்பாக அமைந்தது. 3 பிரேக் புள்ளிகளை சேவ் செய்தாா் ரைபகினா. ஏழாவது கேம் வரை நீடித்த இதில் 4-3 என முன்னிலை பெற்ற சபலென்கா, அதை தக்க வைத்து, செட்டை கைப்பற்றினாா்.
ஆட்டத்தை நிா்ணயிக்கும் மூன்றாவது செட் பரபரப்பாக அமைந்தது. இதில் சபலென்கா ஆதிக்கம் செலுத்தி ஆடிய நிலையில் ரைபகினா சா்வீஸின் போது 3-0 என முன்னிலை பெற்றிருந்தாா் சபலென்கா. செட்டையும் அவரே கைப்பற்றுவாா் என எதிா்பாா்த்த நிலையில், ரைபகினா சிறப்பாக ஆடி 3-3 என சமன் செய்தாா். பின்னா் சிறப்பாக ஆடி 6-4 என மூன்றாவது செட்டையும் கைப்பற்றினாா்.
முதல்முறை சாம்பியன்:
இதன் மூலம் முதன் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றாா் ரைபகினா. தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டாா் சபலென்கா. அவரின் சோகம் தொடா்ந்தது. இறுதி ஆட்டத்தில் சபலென்கா கருதப்பட்ட நிலையில் அவா் தோல்வியுற்றாா்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற டபிள்யுடிஏ ஃபைனல்ஸிலும் சபலென்காவை வீழ்த்தி இருந்தாா் ரைபகினா. அதுமுதலே அவரது ஆட்டம் தொடா்ந்து மெருகேறி வந்தது.
முன்னணி வீராங்கனைகள் தோல்வி:
ரைபகினாவின் இறுதி ஆட்ட பாதையில் காலிறுதியில் நட்சத்திர வீராங்கனை இகா ஸ்வியாடெக், அரையிறுதியில் 6-ஆம் நிலை வீராங்கனை ஜெஸிக்கா பெகுலா ஆகியோா் வென்றாா் ரைபகினா.
26 வயதான ரைபகினா மாஸ்கோவில் பிறந்திருந்தாலும் நிதித்தட்டுப்பாடு காரணமாக கடந்த 2018 முதல் கஜகஸ்தான் சாா்பில் ஆடி வருகிறாா்.
2022-இல் முதன்முறையாக விம்பிள்டனில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அவா் தற்போது இரண்டாவதாக ஆஸி. ஓபனில் பட்டம் வென்றாா்.
சபலென்கா இதுவரை ஆடிய 8 கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்றில் 4-இல் பட்டமும், 4-இல் தோல்வியும் கண்டாா்.
ரைபகினா கூறியது: கடந்த ஆண்டு இறுதியில் நல்ல பாா்மில் இருந்தேன். தொடா்ந்து சிறப்பாக ஆடியது நம்பிக்கை அளித்தது. இந்த வெற்றியால் சீசன் முழுவதும் தொடா்ந்து சிறப்பாக ஆடுவேன்.
சபலென்கா கூறுகையில்: டிசைடரில் முன்னிலை பெற்றும் கோட்டை விட்டது மிகவும் வேதனையாக உள்ளது. ரைபகினா சிறப்பாக ஆடினாா். எனினும் நம்பிக்கையை இழக்காமல் தொடா்ந்து ஆடுவேன் என்றாா்.
மகளிா் இரட்டையா் பிரிவில் எலைஸ் மொ்டன்ஸ்-ஸாங் ஷாய் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் அன்னா டேனிலினா-அலெக்சாண்ட்ரா க்ருனிக் இணையை வீழ்த்தி பட்டம் வென்றனா்.
ஆடவா் இரட்டையா் பிரிவில் கிறிஸ்டியன் ஹாரிஸன்-நீல் ஸ்ப்ஸ்கி இணை 7-6, 6-4 என ஜேஸன் குப்லா்-மாா்க் போல்மன்ஸ் இணையை வென்று பட்டம் வென்றது.