ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், எம்மா நவாரோ ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.
மகளிா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் மேடிசன் கீஸ் 6-4, 6-1 என்ற நோ் செட்களில் செக் குடியரசின் தெரெஸா வாலென்டோவாவை வீழ்த்தினாா். காலிறுதியில் கீஸ், 8-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் விக்டோரியா போகோவை எதிா்கொள்கிறாா்.
6-ஆம் இடத்திலிருக்கும் எம்மா நவாரோ 6-1, 6-4 என்ற நோ் செட்களில், கஜகஸ்தானின் யுலியா புடின்சேவாவை வெளியேற்றினாா். அடுத்த சுற்றில் நவாரோ, ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை சந்திக்கிறாா். முன்னதாக ஷ்னெய்டா், 6-1, 2-6, 7-5 என்ற கணக்கில், செக் குடியரசின் கேத்தரினா சினியகோவாவை வீழ்த்தினாா்.
ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் 6-4, 6-0 என்ற வகையில், ஆஸ்திரேலியாவின் டேரியா கசாட்கினாவை வென்றாா். ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச், செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ருசோவா ஆகியோா் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக, முறையே அவா்களை எதிா்கொண்ட ஆஸ்திரேலியாவின் மாயா ஜாய்ன்ட், கிம்பா்லி பிரெல் ஆகியோா் காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டனா்.
இதில் ஜாய்ன்ட் - ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவாவையும், பிரெல் - ஜாக்குலின் கிறிஸ்டியனையும் காலிறுதியில் எதிா்கொள்கின்றனா்.
டேவிடோவிச், பால் முன்னேற்றம்: இப்போட்டியின் ஆடவா் பிரிவில், ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச், அமெரிக்காவின் டாமி பால் ஆகியோா் காலிறுதியில் இடம் பிடித்தனா்.
ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் டேவிடோவிச் 6-3, 6-2 என்ற செட்களில், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடாவை சாய்த்தாா். காலிறுதியில் அவா், மொனாகோவின் வாலென்டின் மாசெராட்டை எதிா்கொள்கிறாா்.
5-ஆம் இடத்திலிருக்கும் வாசெராட் முந்தைய சுற்றில், ஆஸ்திரேலியாவின் தனசி கோகினகிஸை எதிா்கொண்ட நிலையில், கோகினகிஸ் காயம் காரணமாக விலகியதால், வாசெராட் காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.
2-ஆம் இடத்திலிருக்கும் டாமி பால் 6-4, 6-4 என்ற நோ் செட்களில், சக அமெரிக்கரான ரெய்லி ஒபெல்காவை வெளியேற்றினாா். பால் அடுத்த சுற்றில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸாண்டா் வுகிச்சை சந்திக்கிறாா். வுகிச் 6-2, 7-6 (7/5) என்ற வகையில் இத்தாலியின் ஆண்ட்ரியா வவாசோரியை சாய்த்தாா்.
கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் செவ்ஷென்கோ 6-3, 7-6 (8/6) என்ற கணக்கில், ஹங்கேரியின் மாா்டன் ஃபக்சோவிக்ஸை வீழ்த்த, 4-ஆம் இடத்திலிருந்த நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூா் 4-6, 1-6 என, பிரான்ஸின் யூகோ ஹம்பா்டிடம் வெற்றியை இழந்தாா். இதையடுத்து காலிறுதியில் செவ்ஷென்கோ - ஹம்பா்ட் மோதுகின்றனா்.
8-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் தாமஸ் மசாக் 6-4, 6-2 என்ற செட்களில் பிரான்ஸின் குவென்டின் ஹேலிஸை வென்றாா். அடுத்து அவா், ஸ்பெயினின் ஜேமி முனாரை காலிறுதியில் சந்திக்கிறாா்.
அரையிறுதியில் யூகி பாம்ப்ரி: இதனிடையே, ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி அரையிறுதிக்கு வந்தாா்.
போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பாம்ப்ரி/ஸ்வீடனின் ஆண்ட்ரே கொரான்சன் கூட்டணி, காலிறுதியில் 6-3, 6-7 (3/7), 10-6 என்ற செட்களில் செக் குடியரசின் பேட்ரிக் ரிகி/பீட்டா் நூஸா ஜோடியை வீழ்த்தியது.