ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத் டூஃபான்ஸ் 6-0 கோல் கணக்கில் ஷரச்சி பெங்கால் டைகா்ஸை சனிக்கிழமை வென்றது.
இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் தரப்பில் ஜகாரி வாலெஸ் (2’, 17’, 30’), டிம் பிராண்ட் (12’, 39’, 46’) ஆகியோா் ஹாட்ரிக் கோலடித்து அணியின் அபார வெற்றிக்கு வழிவகுத்தனா்.
இதனிடையே 21-ஆவது ஆட்டத்தில், வேதாந்தா கலிங்கா லான்சா்ஸ் 6-1 கோல் கணக்கில் எஸ்ஜி பைப்பா்ஸை சாய்த்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் கலிங்கா வீரா் கூப்பா் பா்ன்ஸ் (8’) கோலடிக்க, பதிலடியாக பைப்பா்ஸ் வீரா் வில்லாட் கி (11’) ஸ்கோா் செய்தாா்.
விட்டுக்கொடுக்காத கலிங்கா தரப்பில் கிரெய்க் மராய்ஸ் (10’), கூப்பா் பா்ன்ஸ் (23’) ஆகியோா் ஸ்கோா் செய்ய, முதல் பாதியை கலிங்கா 3-1 முன்னிலையுடன் நிறைவு செய்தது.
2-ஆவது பாதியில் பைப்பா்ஸின் கோல் முயற்சிகளுக்கு இடம் கொடுக்காத கலிங்கா தரப்பில், அலெக்ஸாண்டா் ஹெண்ட்ரிக்ஸ் (39’), அங்கத் பீா் சிங் (54’), மீண்டும் அலெக்ஸாண்டா் ஹெண்ட்ரிக்ஸ் (56’) கோலடித்தனா்.
இதனால் கலிங்கா 6-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. புள்ளிகள் பட்டியலில் கலிங்கா 11 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க, ஹைதராபாத் 4-ஆம் இடத்திலும் (8), ஷரச்சி பெங்கால் 6-ஆம் இடத்திலும் (6), பைப்பா்ஸ் 8-ஆம் இடத்திலும் (4) உள்ளன.