இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனையும், பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 முன்னாள் வீராங்கனையுமான சாய்னா நேவால் அனைத்து விதமான பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சாய்னா நேவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டிக் களத்தை விட்டு விலகியிருந்தாலும், ஓய்வு குறித்து எந்தத் தகவலும் வெளியிடாமல் இருந்தார்.
இந்த நிலையில், தற்போது தனது ஓய்வு குறித்து அதிகாரபூர்வமாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விளையாடுவதை நிறுத்திவிட்டேன். நான் என் விருப்பப்படி போட்டிக் களத்துக்குள் நுழைந்தது போலவே என் விருப்பப்படி களத்தில் இருந்து வெளியேறினேன்.
அதனால், அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் உணர்ந்தேன். என் ஓய்வை பெரிய விஷயமாக நான் நினைக்கவில்லை. நீங்கள் விளையாட முடியவில்லை என்றால், அவ்வளவுதான். அதை பெரியதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.
என்னுடைய முழங்கால் மூட்டில் தொடர்ந்து வலி இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால், என்னுடைய பெற்றோர், பயிற்சியாளரிடம் இதுபற்றி கூறினேன். இப்போது என்னால் இனி விளையாடமுடியாது. அது கடினம்.
உலகிலேயே சிறந்த வீரராக இருக்க குறைந்தது எட்டு முதல் ஒன்பது மணிநேரம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நான் ஒரு மணி நேரம் பயிற்சி மேற்கொண்டாலே என்னுடைய காலில் வீக்கம் ஏற்படுகிறது. இனி இதற்கு மேலும் விளையாட முடியாது” எனத் தெரிவித்தார் சாய்னா.
2012 லண்டன் ஒலிம்பிக், 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கங்கள் வென்றிருந்த சாய்னா நேவால், 2018 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றிருந்தார். அதன்பின், முழங்கால் காயத்தால் அவதியடைந்த அவர் 2023 ஆம் ஆண்டில் கடைசியாக சிங்கப்பூர் ஓபனில் பங்கேற்றார்.
ஹரியாணாவில் பிறந்தவரான சாய்னா நேவால், தனது பெரும்பாலான காலத்தை ஹைதராபாத்திலேயே கழித்திருக்கிறார். 35 வயதான சாய்னா, தனது சக வீரரான பருபள்ளி காஷ்யப் என்பவரை மணம் முடித்துள்ளார்.
சாய்னாவுக்கு 2009 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதும், 2010 ஆம் ஆண்டில் ராஜீவ் கேல் ரத்னா மற்றும் பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.