லடாக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி போட்டிகளில், நடப்பு சாம்பியன் லடாக் மகளிர் அணி மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி) ஆண்கள் அணிகள் அபார வெற்றி பெற்றன.
கேலோ இந்தியா 6-ஆவது குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் முதல்கட்டமாக பனி ஸ்கேட்டிங் மற்றும் பனி ஹாக்கி போட்டிகள், லடாக் யூனியன் பிரதேசத்தின் லே நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வருகிற ஜன.26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகளுக்கான தொடக்க விழா, நவாங் டோர்ஜன் ஸ்டோப்தான் (என்டிஎஸ்) மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
லடாக் துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா போட்டிகளை தொடங்கிவைத்தார்.
இவ்விழாவில் பாரம்பரிய இசை, நடனம் ஆகியவற்றுடன் ராணுவ ஆண்கள் அணி- லடாக் ஆண்கள் அணிகளுக்கிடையேயான நட்பு ரீதியிலான ஐஸ் ஹாக்கி போட்டி நடைபெற்றது.
முதல் நாளில் நடைபெற்ற மகளிர் ஐஸ் ஹாக்கி "பி' பிரிவு போட்டியில், இந்தோ-திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி) அணி, ராஜஸ்தான் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அதே பிரிவில், இமாச்சலப் பிரதேச அணி ஹரியானா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
மேலும் "ஏ' பிரிவு போட்டியில், லடாக் மகளிர் அணி, தெலங்கானா அணியை 19-1 என்ற அபார கோல் கணக்கில் வீழ்த்தியது. அதேபோல், ஆண்கள் பனி ஹாக்கி போட்டிகளில் "ஏ' பிரிவு நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியனான ராணுவ அணி, ஹிமாசலப் பிரதேச அணியை 5-1 என்ற கணக்கில் வென்றது. "பி' பிரிவு போட்டியில், ஐடிபிபி ஆண்கள் அணி, ராஜஸ்தான் அணியை 16-0 என்ற கோல் கணக்கில் வென்றது . அதே பிரிவில், லடாக் அணி ஹரியாணா அணியை 7-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஐஸ் ஸ்கேட்டிங்: ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளுக்கான ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிகள் புதன்கிழமை (ஜன.21) முதல் தொடங்குகின்றன. இதில் ஃபிகர் ஸ்கேட்டிங், நீண்ட பாதை வேக பனி ஸ்கேட்டிங் மற்றும் குறுகிய பாதை வேக ஸ்கேட்டிங் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 7 பேரை கொண்ட தமிழக அணி பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.