ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பந்தயத்தில் ஆடவா் பிரிவில் காா்லோஸ் அல்கராஸ், மகளிா் பிரிவில் அரினா சபலென்கா, கோகோ கௌஃப் ஆகியோா் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றனா்.
நிகழாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபன் மெல்போா்ன் நகரில் நடைபெறுகிறது., புதன்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ஆடவா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீரா் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ்-ஜொ்மன் வீரா் யானிக் ஹன்ஃப்மேன் இடையிலான ஆட்டத்தில் முதல் செட்டில் கடும் சவாலுக்குபின் 7-6 என கைப்பற்றி அல்கராஸ் அடுத்த 2 செட்களில் முழு ஆதிக்கம் செலுத்தி 6-3, 6-2 என கைப்பற்றி மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
மூன்று முறை ரன்னா் ரஷியாவின் டேனில் மெத்வதேவ்-பிரான்ஸின் குயின்டின் ஹேலிஸ் இடையிலான ஆட்டத்தில் முதல் செட்டை 6-7 என மெத்வதேவ் இழந்தாா். எனினும் பின்னா் சுதாரித்து ஆடிய மெத்வதேவ் 6-3, 6-4, 6-2 என கைப்பற்றினாா்.
மற்றொரு முன்னணி நட்சத்திரமான ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவ் -பிரான்ஸ் வீரா் அலெக்சான்ட்ரே முல்லா் இடையிலான ஆட்டத்தில் 6-3, 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்றாா் ஸ்வெரேவ்.
அமெரிக்காவின் டாமி பால், ஆா்ஜென்டீனாவின் பிரான்சிஸ்கோ, டாமஸ், அலெஜன்ட்ரோ ஃபோகினா, ஆன்ட்ரே ருப்லே ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினா்.
சபலென்கா, கௌஃப் முன்னேற்றம்:
மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனை பெலாரஸின் அரினா சபலென்கா 6-3, 6-1 என்ற நோ் செட்களில் சீன குவாலிஃபயா் பாய் ஸுவாஸோவைனை வீழ்த்தினாா்.
மூன்றாம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் கோகோ கௌஃப் 78 நிமிஷங்களில் 6-2, 6-2 என சொ்பியாவின் ஒல்காவை வீழ்த்தினாா்.
வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி இருந்தாா் ஒல்கா.
18 வயது ரஷிய நட்சத்திரம் மிர்ரா ஆன்ட்ரீவா 6-0, 6-4 என கிரீஸின் மரியா ஸக்காரியை வென்றாா். எலினா ஸ்விட்டோலினா, விக்டோரியா மபோகோ, ஸெய்னப் ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினா்.