அறிமுக உலக யோகாசனம் சாம்பியன்ஷிப்..! ஒலிம்பிக்கில் சேர்க்கவும் திட்டம்!
அறிமுக உலக யோகாசனம் சாம்பியன்ஷிப் குறித்து...
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிமுக உலக யோகாசனம் சாம்பியன்ஷிப்புக்கு முன்பாக அளித்த பேட்டியில், “யோகாசனம் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க திட்டமிடப்பட்டு வருகிறது” எனக் கூறியுள்ளார்.
யோகாசனத்தை ஒரு விளையாட்டு போட்டியாக அங்கீகரித்து கெலோ இந்திய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்க ஆயுஷ் மற்றும் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சகம் கடந்த 2020ல் ஒப்புதல் அளித்துள்ளது.
முதல்முறையாக நடைபெறும் உலக யோகாசனம் சாம்பியன்ஷிப் போட்டிகள் அகமதாபாதில் வரும் ஜூன் 4 முதல் 8ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.
Advertisement
Advertisement
இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 60க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 529 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 114 பேர் பங்கேற்கிறார்கள்.
தற்போது இந்திய போட்டியாளர்கள் அகமதாபாதில் இருக்கும் வீர் சவார்கர் விளையாட்டு பகுதியில் பயிற்சி செய்து வருகிறார்கள். இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியிருப்பதாவது:
யோகாசனம் 2030 காமன்வெல்த் போட்டியில் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக அமையும். 2036 ஒலிம்பிக்கை இந்தியாவில் நடத்த திட்டமிட்டு வருகிறோம். அது சாத்தியமானால், யோகாசனம் அதில் இடம்பெறும்.
இந்திய அரசு, யோகாசனா பாரத் இரண்டுமே ஒலிம்பிக்கில் யோகாசனத்தைப் பங்கேற்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
75 நாடுகளின் ஒப்புதல் இருந்தால் ஒலிம்பிக் கமிட்டியிடம் கோரிக்கை வைக்கலாம். அவர்கள் ஒப்புதல் அளித்தால் இது சாத்தியமாகும் என்பது நடைமுறையாக இருக்கிறது.
யோகாசனம் சாம்பியன்ஷிப்பில் 12 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் 10 முதல் 55 வயதுவரை ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினரும் பங்கேற்கவிருக்கிறார்கள்.
ஆசியாவில் இருந்து பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் இதில் பங்கேற்கவில்லை. வலைகுடா நாடுகளின் ராணுவ சிக்கலினால் சில நாடுகள் இதில் பங்கேற்காததும் குறிப்பிடத்தக்கது.
யோகா என்பது உடல்நலனுக்கான ஒரு யுக்தி. ஆனால், யோகாசனம் என்பது உடலின் நிலை. இதை மதிப்பிட முடியும். இதனை 9 நடுவர்கள் வைத்து மதிப்பிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.