இப்போதைக்குப் பந்துவீச மாட்டேன்: ஹார்திக் பாண்டியா
இப்போதைக்குப் பந்து வீச மாட்டேன். அரையிறுதிக்கு முன்பு பந்துவீச விருப்பப்படுகிறேன்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதிக்கு முன்பு பந்துவீசத் தயாராகி விடுவேன் என ஆல்ரவுண்டர் பாண்டியா கூறியுள்ளார்.
இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராகத் தனது முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான். இதுவரை டி20, ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவிடம் 13 முறை பாகிஸ்தான் அணி தோல்வி கண்டிருந்தது. இந்த முறையும் தோல்வி காணும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் கேப்டன் பாபா்-ரிஸ்வான் இணையின் அதிரடி ஆட்டத்தால் வரலாற்றை மாற்றியது பாகிஸ்தான்.
துபை சா்வதேச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 151/7 ரன்களை எடுத்தது. இரண்டாவதாக ஆடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர்களில் 152 ரன்களைக் குவித்து அபார வெற்றி கண்டது.
இந்த ஆட்டத்தின்போது தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஹார்திக் பாண்டியா கூறியதாவது:
எனது முதுகு வலி குணமடைந்துள்ளது. இப்போதைக்குப் பந்து வீச மாட்டேன். அரையிறுதிக்கு முன்பு பந்துவீச விருப்பப்படுகிறேன். நான் எப்போது பந்துவீசலாம் என மருத்துவக் குழுவினரிடம் விவாதித்து முடிவுக்கு வருவோம் என்றார்.
ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணியில் விளையாடிய பாண்டியா, காயம் காரணமாக ஒரு ஓவர் கூட வீசவில்லை. 2019 அக்டோபரில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார் பாண்டியா. அதன்பிறகு விளையாடிய 41 சர்வதேச ஆட்டங்களில் 46 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். கடைசியாக ஜூலை 25 அன்று இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இரு ஓவர்களை வீசினார்.