டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவிடம் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேசியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று (ஜூன் 6) நடைபெற்றது. இந்தப் போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமெரிக்க அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் அணி லேசாக எடுத்துக் கொண்டதாகவும், திட்டங்களை சரிவர செயல்படுத்தத் தவறியதாகவும் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எந்த ஒரு தொடரில் விளையாடினாலும், அதற்கேற்றவாறு சிறப்பாக அணிகள் தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த நாடுகளுக்கு (அசோஸியேட் நாடுகள்) எதிரான போட்டிகளில் விளையாடும்போது, சாதரணமாக விளையாடலாம் என்ற மனநிலை இருக்கிறது.
எந்த ஒரு அணிக்கு எதிராக விளையாடினாலும், திட்டங்களை சரியாக செயல்பட்டுத்தாவிட்டால், அந்த அணி உங்களை தோற்கடித்து விடும். அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. போட்டிக்கு நன்றாக தயாரானோம். ஆனால், போட்டியின்போது எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை. நான் ஏமாற்றத்துடன் இருக்கிறேன். பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலுமே நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றார்.
நாளை மறுநாள் (ஜூன் 9) நியூயார்க்கில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.