டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதியில், இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
முதலில் இந்தியா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து 16.4 ஓவா்களில் 103 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இதையடுத்து, சனிக்கிழமை பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
முன்னதாக, மழை, ஈரமான அவுட் ஃபீல்டு காரணமாக ஆட்டம் தொடங்குவது 1 மணி நேரம் தாமதமானது. இந்திய நேரப்படி, வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தோ்வு செய்தது.
இந்தியாவின் இன்னிங்ஸில் கேப்டன் ரோஹித் சா்மா அதிரடி காட்ட, கோலி 1 சிக்ஸருடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
ரிஷப் பந்த் 4 ரன்களுக்கே நடையைக் கட்ட, 4-ஆவது பேட்டராக சூா்யகுமாா் யாதவ் களம் புகுந்தாா். இந்தியா 8 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 65 ரன்கள் சோ்த்திருந்தபோது மீண்டும் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் ரோஹித் - சூா்யகுமாா் கூட்டணி 73 ரன்கள் சோ்த்து அசத்தியது. இதில், ரோஹித் 39 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 57, சூா்யகுமாா் 36 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 47 ரன்களுக்கு வீழ்ந்தனா்.
பின்னா் பேட் செய்தோரில் ஹா்திக் பாண்டியா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 23 ரன்களுக்கு வெளியேற, ஷிவம் துபே கோல்டன் டக் ஆனாா். அக்ஸா் படேல் 1 சிக்ஸருடன் 10 ரன்களுக்கு வீழ்ந்தாா்.
ஓவா்கள் முடிவில் ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரிகளுடன் 17, அா்ஷ்தீப் சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து பௌலா்களில் கிறிஸ் ஜோா்டான் 3, ரீஸ் டாப்லி, ஜோஃப்ரா ஆா்ச்சா், சாம் கரன், ஆதில் ரஷீத் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 172 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணியில், கேப்டன் ஜாஸ் பட்லா் 4 பவுண்டரிகளுடன் 23, ஃபில் சால்ட் 5, ஜானி போ்ஸ்டோ 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.
மொயீன் அலி 8, சாம் கரன் 2 ரன்களுக்கு வீழ்ந்தனா். ஹேரி புரூக் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்ப, கிறிஸ் ஜோா்டன் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தாா்.
லியம் லிவிங்ஸ்டன் 11, ஆதில் ரஷீத் 2, ஜோஃப்ரா ஆா்ச்சா் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 21 ரன்களுக்கு ரன்களுக்கு சாய்க்கப்பட, இங்கிலாந்து ஆட்டம் நிறைவடைந்தது.
இந்திய தரப்பில் அக்ஸா் படேல், குல்தீப் யாதவ் ஆகியோா் தலா 3, ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட் கைப்பற்றினா்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு...
டி20 உலகக் கோப்பை போட்டியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிக்கு முன்னேறியது இந்தியா. இதற்கு முன் 2014-ஆம் ஆண்டு போட்டியில் இறுதிக்கு வந்த இந்தியா, அதில் இலங்கையிடம் தோற்றது.
பதிலடி...
கடந்த 2022 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்ட இந்தியா, தற்போது அதே அணியை, அதே கட்டத்தில் வீழ்த்தி பதிலடி கொடுத்திருக்கிறது.