சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வு முடிவை அறிவித்துள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.
ஐசிசி நடத்தும் தொடர்களில் 11 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த கோப்பைக்கானத் தேடல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி நடத்தும் தொடர்களில் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வு பெறுவதாக தங்களது ஓய்வு முடிவையும் அறிவித்தனர்.
இந்த நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வு முடிவை அறிவித்துள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறியவை பின்வருமாறு:
ஜாகிர் அப்பாஸ்
நான் ரோஹித் சர்மாவின் மிகப் பெரிய ரசிகன். ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும்போது கண்டிப்பாக அதனை தொலைக்காட்சியில் பார்க்க எப்போதும் முயற்சி செய்வேன். விராட் கோலி மிகச் சிறந்த வீரர். அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதற்கு அவரது சாதனைகளே சான்று. ரோஹித் சர்மா அவரது தலைமையில் இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி.
ஜாவத் மியான்தாத்
சரியான நேரத்தில் இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தங்களது ஓய்வு முடிவை அறிவித்துள்ளனர். அவர்கள் இருவரையும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக பார்க்கலாம். டி20 கிரிக்கெட் பயணத்தை வெற்றியின் உச்சத்தில் அவர்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். எந்த வடிவிலான கிரிக்கெட்டுக்கும் அவர்கள் இருவரும் முன்னுதாரணமாக இருப்பார்கள்.
வாகர் யூனிஸ்
கடினமான சூழல்களில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளனர். இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் ஜஸ்பிரித் பும்ரா அபாரமாக பந்துவீசினார். இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பவராக அவர் மாறியுள்ளார்.
ரஷித் லாட்டிஃப்
கடந்த ஓராண்டில் இந்திய அணி ஐசிசி நடத்தும் மூன்று தொடர்களில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது அந்த அணி நிர்வாகம் மற்றும் வீரர்கள் எந்த அளவுக்கு தங்களுக்குள் புரிதலில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டும் மற்றும் அணியின் உதவிப் பணியாளர்களுமே காரணம். இந்திய அணிக்கு அவர் தெளிவான பாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
ஷகித் அஃப்ரிடி
ரோஹித் சர்மா மிகச் சிறந்த கேப்டன். விராட் கோலி எப்போதும் போட்டியை வென்று கொடுப்பவர். அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு மிகச் சரியான விஷயத்தை செய்துவிட்டு ஓய்வு பெறுகிறார்கள்.
மோஷின் கான்
இளம் வீரர்களுக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகச் சிறந்த உதாரணம். எந்த ஒரு வடிவிலான கிரிக்கெட்டாக இருந்தாலும், வீரர் ஒருவர் இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் ஓய்வு பெற வேண்டும். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் இடங்களை நிரப்புவதற்கு இந்திய அணியில் நிறைய திறமை வாய்ந்த இளம் வீரர்கள் இருக்கிறார்கள். இந்த இரண்டு மூத்த வீரர்களின் (ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி) உலகக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற ஈடுபாடு அவர்களை வியந்து பார்க்கச் செய்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.