பணமே பகையாகிறது...
சென்னை, மே 8: வாக்காளர்களுக்குப் பணம் தருவதும் கூட தங்களுக்கு பாதகமாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் சில வேட்பாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த முறை நிறையப் பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிட
சென்னை, மே 8: வாக்காளர்களுக்குப் பணம் தருவதும் கூட தங்களுக்கு பாதகமாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் சில வேட்பாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்த முறை நிறையப் பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடையே எப்படியோ உருவாகியுள்ளது.
மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சிவகங்கையிலும் பணம் தர முயன்றதாகக் கூறி அதைத் தடுக்க போராட்டம் நடந்தது.
தேர்தல் பிரசார செலவில் திமுக கூட்டணி வேட்பாளர்களே "தாராளமாக' இருப்பதாகத் தெரிகிறது.
ஊரகப் பகுதிகளில் வாக்குச் சாவடிகளுக்கு ரூ.5,000 வரை தரப்படுகிறதாம். நீலகிரியில் கிராமங்களில் ஒரு வார்டுக்கு ரூ.5,000 என வெள்ளிக்கிழமை தந்ததாகத் தெரிகிறது. அதுவும்கூட 2 நாள்களுக்குதானாம்.
அடுத்தகட்ட பட்டுவாடா திங்கள்கிழமை வருமாம்.
பிரசாரம் முடிந்தபின், வாக்குப் பதிவுக்கு முன்பு ஒரு ஓட்டுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை கிடைக்கும் என மலை கிராம மக்களுக்கு வாக்குறுதி தந்துள்ளனர். இந்த வாக்குறுதியைக் கொடுத்தவர்கள், எந்த வழியில் பணத்தைத் தரப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.
இதை எப்படியும் தடுத்தாக வேண்டும் என எதிரணியில் 150 பேர் கொண்ட குழு உதகை மலைப் பகுதிகளில் இடைவிடாத கண்காணிப்பில் உள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள திமுகவினரில் பலரும் புதிய செல்போன்களை வைத்திருப்பது, அக் கட்சியினரின் "தாராள' மனதைக் காட்டுவதாக உள்ளது.
சேலம் பகுதியில் பணமாகத் தருவதற்குப் பதிலாக குக்கர், இளைஞர்களுக்கு வெளியூர் பயணங்களுக்கான சக்கரங்கள் பொருத்தப்பட்ட இழுவைப் பெட்டிகள், பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கான புத்தகப் பைகள் ஆகியவற்றுக்குப் பரிசுக்குரிய டோக்கன்களாகத் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் போட்டியிடும் மத்திய சென்னையில் நேரடியாக பணப் பட்டுவாடா நடந்ததாகத் தெரியவில்லை.
இருந்தாலும், அவரது கட்சியினர் செய்யும் தாராளமான செலவைப் பார்த்து, மக்களிடம் எதிர்ப்பு உணர்வு உருவாகியுள்ளது. கடந்த முறை தேர்தலில் நின்றபோது இவ்வளவு தாராளமாக செலவு செய்யவில்லை. இப்போது இவ்வளவு பணம் எப்படி வந்தது, நம்முடைய ஓட்டுகளால்தானே வந்தது என பேசத் தொடங்கிவிட்டனர்.
அழகிரி போட்டியிடும் மதுரையில்தான் அதிகமான பணம் தரப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
அங்கு பணம் பட்டுவாடா நடந்துள்ளது என்றாலும், மார்க்சிஸ்ட் கட்சியும், திமுகவும் இதுபற்றி பரஸ்பரம் புகார் சொல்கின்றன.
திமுக பணம் தந்ததாக மார்க்சிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் தந்ததாக திமுகவும் புகார்களைப் பதிவு செய்துள்ளன.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளின் பாராமுகத்தால்தான் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்ற பிரசாரத்தால் அச்சமடைந்திருக்கும் திமுக அணியினர் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர்.
அதற்காக எவ்வளவு செலவு செய்யவும் தயாராக உள்ள வேட்பாளர்கள்தான் பெரும்பாலும் களத்தில் உள்ளனர்.
ஆனால், நிறைய பணம் செலவு செய்வதால் மக்களின் கோபத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற கவலையும் வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு இருந்து பணம் தராவிட்டாலும் பிரச்னை வருமே என்றும் கவலைப்படுகின்றனர்.
ஆளும்தரப்பில் இதுவரை தொகுதிக்கு ரூ.15 கோடி வரை செலவு செய்திருப்பதாக அதிமுக தரப்பினர் புகார் கூறுகின்றனர். இன்னமும் செலவு செய்வார்கள் என்ற அச்சமும் இவர்களுக்கு உள்ளது.
அதிமுக அணியில் செலவுக்குப் பணம் போதவில்லை என்ற பற்றாக்குறைதான் நிலவுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.2 கோடி தந்ததாகச் சொல்கிறார்களே தவிர, வேட்பாளர்கள் யாரும் செலவு செய்ய மறுக்கிறார்கள் என கட்சியினர் புலம்புகின்றனர்.
பணத்தால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது என்பதற்கு 1996 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு ஒரு சான்று என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அன்றைய தேதியில் அதிமுக வேட்பாளர்கள் "தாராளமாகவே' செலவு செய்தபோதிலும், ஆட்சியை இழக்க நேரிட்டது.
அதை மனதில் கொண்டு, இப்போது எப்படி நிலைமையை சமாளிப்பது எனத் தெரியாமல் வேட்பாளர்கள் நெருக்கடியில் உள்ளனர்.