கதர் கிராமத் தொழில் வாரியத்தை மூடும் நடவடிக்கை: ஆள் எடுப்புக்குத் தடை; பணியாளர்கள் மாற்றம்
சென்னை, நவ. 29: தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தை மூடும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. முதல் கட்டமாக, தட்டச்சர், காவலர், பணி உதவியாளர்கள் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்களில் 378
சென்னை, நவ. 29: தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தை மூடும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
முதல் கட்டமாக, தட்டச்சர், காவலர், பணி உதவியாளர்கள் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்களில் 378 பேர் மிகைப் பணியாளர்கள் என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வாரியத்துக்கு ஆள் எடுப்பதற்கும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம், 1960-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த வாரியத்தில் இப்போது 1,726 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்கள், வணிகம் சார்ந்த பணியாளர்கள், வணிகம் சாரா பணியாளர்கள் என இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றனர்.
வணிகம் சார்ந்த பணியாளர்களின் செலவினங்கள் அனைத்தும் கதர் கிராம தொழில் வணிகத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் இருந்து செலவிடப்படுகிறது.
தட்டச்சர், ஆய்வுக் கூட உதவியாளர், மேற்பார்வையாளர், இயந்திரம் இயக்குபவர், கதர் உதவியாளர், அலுவலக உதவியாளர், மின் துப்புரவாளர், பணி உதவியாளர், காவலர் ஆகியோர் வணிகம் சாரா பணியாளர்களாகக் கருதப்படுகின்றனர்.
378 பேர் மிகை ஊழியர்கள்... பணியாளர்களின் ஊதிய செலவினங்களை மேற்கொள்ளத் தேவையான நிதியை வாரியம் ஈட்டவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இந்தக் காரணத்தால், கதர் கிராம தொழில் வாரியத்தில் வணிகம் சாரா பணியாளர்கள் 378 பேர் மிகையாக இருப்பதாகவும் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.
அவர்களை அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், தன்னாட்சி உரிமை பெற்ற நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள பணியிடங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, கைத்தறி, கைத்திறன் மற்றும் துணிநூல் துறையின் முதன்மைச் செயலாளர் ஆர். ராஜகோபால் வெளியிட்டுள்ள உத்தரவு:
""கதர் வாரியத்தில் மிகையாக உள்ள ஊழியர்களின் பணியிடங்களுக்கு இணையான காலியிடங்கள் அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், தன்னாட்சி பெற்ற அமைப்புகள் ஆகியவற்றில் இருந்தால் அவற்றை கதர் வாரிய ஊழியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
அதுவரை, அந்தப் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பகம் மற்றும் பிற வழிகளில் நியமனம் செய்யப்படக் கூடாது. இவ்வாறு, காலியிடங்களை நிரப்பும் போது, அந்தப் பணியிடங்களுக்கான தகுதி மற்றும் பொருத்தம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளலாம்.
ஆள் எடுப்புக்குத் தடை... பிற துறைகள் மற்றும் அமைப்புகளால் மிகைப் பணியாளர்கள் எடுத்துக் கொள்ளப்படும் வரை அல்லது சுய விருப்ப ஓய்வின் கீழ் செல்லும் வரை அவர்கள் கதர் வாரிய ஊழியர்களாகவே கருதப்பட்டு, அந்த நிறுவனத்திலேயே தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
இந்த உத்தரவு சுய விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்குப் பொருந்தாது. தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தில் ஆள் எடுப்பு செய்வது இனி முழுமையாக தடை செய்யப்படுகிறது.
பணி பாதுகாப்பு கிடையாது... கதர் வாரியத்தில் அதிகப்படியாக உள்ள ஊழியர்கள் பிற துறைகளில் நியமனம் செய்யப்படும் போது, அவை புதிய நியமனமாகக் கருதப்படும். இதன்மூலம், கதர் வாரியத்தில் பணிபுரிந்த பணி அனுபவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
பிற துறைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும் ஊழியர்களுக்கு சம்பளப் பாதுகாப்பு அளிக்கப்படலாம். ஆனால், அவர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்கத் தேவையில்லை'' என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.