முகப்பு
தமிழ்நாடு

வெளிநாட்டுப் பயணங்கள்: மத்திய அரசை பின்பற்றுங்கள்- முதல்வர் கருணாநிதி

அமைச்சர்கள், அரசுத் துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்த அறிவுரை...

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:48 PM
பகிர்:

சென்னை, அக். 1: "வெளிநாட்டுப் பயணங்களில் மத்திய அரசின் அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்' என்று அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

  இதுதொடர்பான கடிதம் (படம்) தலைமைச் செயலாளர் மூலம் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  வெளிநாட்டுப் பயணங்களில் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் அமைச்சர்கள், அதிகாரிகள் விமானங்களில் சாதாரண வகுப்பில் பயணம் செய்து வருகின்றனர்.

  தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் சிலர் தில்லிக்கு சாதாரண வகுப்பில் பயணம் செய்கின்றனர். இதேபோன்று, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில் மூலம் சென்று வருகிறார்.

  தமிழகத்திலும்...    இந்த நிலையில், தமிழகத்திலும் இதேபோன்ற சிக்கன நடவடிக்கையை கையாள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி அறிவுரை வழங்கியுள்ளார்.

  அமைச்சர்கள், அரசுத் துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். "வெளிநாட்டுப் பயணத்தின் போது மத்திய அரசின் அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

  இதுகுறித்த கடிதம் தலைமைச் செயலாளர் மூலம், அரசின் அனைத்துத் துறை செயலாளர்கள், முதல்வரின் செயலாளர், துணை முதல்வரின் முதன்மைச் செயலாளர், அமைச்சர்களின் சிறப்பு உதவியாளர்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  கடித விவரம்...  கடிதத்தில், ""மத்திய அரசினைப் பின்பற்றி, கூடுமான வரையில் வெளிநாட்டு பயணங்களை மட்டுப்படுத்தலாம்'' என்று அமைச்சரவை சகாக்களுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். எனவே, மற்றவர்களும் தங்களது வெளிநாட்டுப் பயணத் திட்டத்தை வகுக்கும் முன்பாக இதை மனதில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  எந்தெந்தத் துறைகளில்...  தொழில் துறை உள்ளிட்ட அரசின் முக்கிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அலுவல் பணி காரணமாக அடிக்கடி வெளிநாடு செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் போது, துறையின் அமைச்சர்களுடன் அதிகாரிகளும் செல்வார்கள். இதனால், ஏற்படும் செலவினத்தைக் குறைக்கவே முதல்வர் கருணாநிதி இதுபோன்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.