முகப்பு
தமிழ்நாடு

மந்தகிதியில் நான்கு வழிப்பாதை விரிவாக்கப் பணிகள்

ஸ்ரீ பெரும்புதூர், அக்.8:  சென்னைக்கு அருகே  ஸ்ரீ பெரும்புதூர் முதல் சிங்கபெருமாள்கோயில் வரை உள்ள சாலையை நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப் பணி மிகவும் தாமதமா

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:53 PM
பகிர்:

ஸ்ரீ பெரும்புதூர், அக்.8:  சென்னைக்கு அருகே  ஸ்ரீ பெரும்புதூர் முதல் சிங்கபெருமாள்கோயில் வரை உள்ள சாலையை நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப் பணி மிகவும் தாமதமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  ஸ்ரீ பெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

  இத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை பல நகரங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு எளிதாக எடுத்துச் செல்ல ஒரகடம் பகுதியை மையமாக வைத்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையும், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் ஸ்ரீ பெரும்புதூர் முதல் ஒரகடம் வரை உள்ள ஒருவழிச் சாலையை முதல் கட்டமாக நான்கு வழிச் சாலையாகவும், இரண்டாம் கட்டமாக ஆறுவழிச் சாலையாகவும், ஒரகடம் முதல் சிங்கபெருமாள்கோயில் வரை உள்ள ஒரு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாகவும், வண்டலூர் - வாலாஜாபாதில் உள்ள இரு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றவும், ஒரகடம் கூட்டுச் சாலையில் ரூ.20 கோடியில் ஒரு மேம்பாலம் அமைக்கவும் தமிழக அரசு 2006-2007-ல் ரூ.300 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்தது.

  அதன்படி சென்ற ஆண்டு ஜூலை மாதம் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டன.

  இந்நிலையில் சாலை விரிவாக்கத்துக்காக நிலங்கள் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் விரிவாக்கப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு அப் பணிகளை முடிக்க வழங்கப்பட்ட கால அளவான 15 மாதத்துக்குள் சாலைகள் முழுமையாக போடப்படாமல் தற்போது பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மேலும் ஒரு சாலையை விரிவாக்கம் செய்யும் போது, முதலில் சாலையின் ஒருபுறத்தை முழுமையாக முடித்துவிட்டு மறுபக்கம் சாலை அமைப்பது வழக்கம். ஆனால் ஸ்ரீ பெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோயில் வரை உள்ள சாலையில் அவ்வாறு செய்யாமல் சாலையின் இருபுறமும் மண் கொட்டப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் எந்த பக்கம் செல்வது என தெரியாமல் தடுமாறுகின்றனர்.

  இதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது சாலையில் கொட்டப்பட்டுள்ள மண் பறந்து எதிரே வரும் வாகனம் தெரியாதபடி புழுதி உண்டாகிறது.

  இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் இலகு ரக வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன.

  மேலும் கடந்த மாதம் பெய்த மழையால் ஸ்ரீ பெரும்புதூர் முதல் சிங்கபெருமாள்கோயில் வரை உள்ள சாலையில் கொட்டப்பட்டுள்ள மண் கரைந்து சேறும் சகதியுமாக மாறி வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஒரகடம் பகுதியில் இருந்து ஸ்ரீ பெரும்புதூர் பகுதிக்கும், சிங்கபெருமாள்கோயில் பகுதிக்கும் இடையே முற்றிலுமாக போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஊழியர்களும் கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர் சுற்றிக் கொண்டு படப்பை வந்து புஷ்பகிரி வழியாக ஸ்ரீ பெரும்புதூர் பகுதிக்கு செல்லவேண்டிய நிலை உண்டானது.

  சாதாரண சிறு மழைக்கே இந்த நிலை என்றால் மழைக் காலத்தில், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு இவ்வழித்தடத்தில் உள்ள மாத்தூர், வல்லக்கோட்டை, வல்லம், போந்தூர் போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வெளியே செல்லமுடியாத நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.  எனவே மழைக் காலத்துக்குள் சாலை விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பது இப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →