முகப்பு
தமிழ்நாடு

தலைமைச் செயலகம்: பிரிவு அலுவலர் காலியிடங்கள் 203 ஆக அதிகரிப்பு

சென்னை, அக். 24:   தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் 203 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.   முன்னதாக, 130 பணியிடங்கள் காலியிடமாக அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், க

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

சென்னை, அக். 24:   தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் 203 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  முன்னதாக, 130 பணியிடங்கள் காலியிடமாக அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், கூடுதலாக 73 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

  இதற்கான உத்தரவை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறை வெளியிட்டுள்ளது.

  தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு துறையின் அலுவலகங்களிலும் உதவி பிரிவு அலுவலர் (ஏ.எஸ்.ஓ.), பிரிவு அலுவலர் (எஸ்.ஓ.,) என்ற படிகளில் ஊழியர்களின் பதவி நிலைகள் உள்ளன.

  ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பதவிகளுக்கு காலியிடங்கள் ஏற்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கருணை அடிப்படையில் வேலை போன்றவற்றின் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

  பிரிவு அலுவலர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதற்காக, எவ்வளவு காலியிடங்கள், அதற்கு எத்தனை பேர் தகுதி என்பன குறித்த பட்டியல் தயாரிக்கப்படும்.

  இந்த ஆண்டுக்கு...  2009 - 2010-ம் ஆண்டுக்கு பிரிவு அலுவலர் பதவிக்கான காலியிடங்கள் 130 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இப்போது, அந்த எண்ணிக்கை 203 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

  எனவே, ஏற்கெனவே உள்ள பட்டியலுடன் கூடுதலாக பயன்பெறப் போகும் 73 பேரின் பட்டியலையும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை கோரியுள்ளது.

  மேலும் தாமதமாகும்...  காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு இருப்பது ஒருபுறம் மகிழ்ச்சி அளிப்பதாக தலைமைச் செயலக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

  அதேசமயம், இந்த அதிகரிப்பு ஏற்கெனவே உள்ளவர்களுக்கு கிடைக்கவிருக்கும் பதவி உயர்வை மேலும் தள்ளிப்போடச் செய்து விடும் எனவும் தலைமைச் செயலக ஊழியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

  ""தலைமைச் செயலகத்தில் உள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வு என்பது கடந்த ஜூன் மாதத்திலேயே கிடைத்திருக்க வேண்டும். பட்டியல் தயார் செய்து பதவி உயர்வுக்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஊழியர்கள் மேலும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது'' என்று தலைமைச் செயலக ஊழியர்கள் கூறுகின்றனர்.

  எனவே, கூடுதல் காலிப் பணியிடங்களுக்கான பட்டியலையும் வேகமாகத் தயார் செய்து பதவி உயர்வு அளித்திட வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.