முகப்பு
தமிழ்நாடு

உரிய தேதியில் ஊதியம் இல்லை: தொடரும் அரசு ஊழியர்களின் அவதி

சென்னை, அக். 28  ஒவ்வொரு மாதமும் தாமதமாக வரும் அரசின் கடிதத்தால் வேளாண் துறையில் பணியாற்றும் 12 ஆயிரம் ஊழியர்கள் உரிய தேதியில் ஊதியம் பெற முடியாத நிலை தொடர்ந்து வருகிறது.   ஊதியம் தாமதமாக வழங்கப்படுவத

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:07 PM
பகிர்:

சென்னை, அக். 28  ஒவ்வொரு மாதமும் தாமதமாக வரும் அரசின் கடிதத்தால் வேளாண் துறையில் பணியாற்றும் 12 ஆயிரம் ஊழியர்கள் உரிய தேதியில் ஊதியம் பெற முடியாத நிலை தொடர்ந்து வருகிறது.

  ஊதியம் தாமதமாக வழங்கப்படுவது தொடர்பாக, வேளாண் ஆணையர் கோசல்ராமன் அனுப்பிய சுற்றறிக்கையிலும் முரண்பாடு இருப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான அனுமதிக் கடிதம் அந்தந்த துறையின் செயலாளர்கள் மூலமாக அனுப்பப்படும். இந்தக் கடிதம் சம்பந்தப்பட்ட துறைகளின் மாவட்ட தலைமை அதிகாரிக்கு கிடைத்த பிறகு, கருவூலத் துறைக்கு ஊழியர்களின் ஊதியப் பட்டியல் அனுப்பப்பட்டு ஊதியம் வழங்கப்படும்.

எப்போது கிடைக்கும்?  கருவூலத் துறைக்கு ஒவ்வொரு மாதமும் 20 முதல் 23-ம் தேதிக்குள் ஊதியப் பட்டியலை அளித்தால், அந்த மாதத்தின் கடைசி வேலை நாளன்று ஊதியம் கிடைத்து விடும்.

  மாதத்தின் 23 முதல் 25-ம் தேதிக்குள் ஊதியப் பட்டியலை அளித்தால் அடுத்த மாதம் 3-ம் தேதி ஊதியம் கிடைக்கும். மாதத்தின் 25-ம் தேதிக்குப் பிறகு ஊதியப் பட்டியலை சமர்ப்பித்தால் கருவூலத் துறை அதிகாரிகள் நிர்ணயிக்கும் தேதியில்தான் ஊதியம் கிடைக்கும்.

வேளாண் துறையில்...  அனைத்து அரசுத் துறைகளிலும் ஊதியம் வழங்குவதற்கான அனுமதிக் கடிதம் சரியான தேதியில் அளிக்கப்பட்டு வரும் நிலையில், வேளாண் துறையில் மட்டும் தாமதமாக அளிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.

  ""அரசுத் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான அனுமதிக் கடிதத்தை ஒன்று முதல் மூன்று ஆண்டுகளுக்குச் சேர்த்தே அந்தந்த துறையின் உயரதிகாரிகள் வழங்கி விடுவார்கள். ஆனால், வேளாண் துறையில் மட்டும் ஒவ்வொரு மாதமும் அனுமதிக் கடிதம் அனுப்பப்படுகிறது. வேளாண் செயலாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதம் துறையின் ஆணையாளர் மூலமாக அனைத்து இணை இயக்குநர்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்தக் கடிதம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் கிடைத்தால்தான் ஊதியப் பட்டியலை கருவூலத் துறைக்கு 20-ம் தேதிக்குள் அனுப்ப முடியும். ஆனால், அனுமதிக் கடிதம் ஒவ்வொரு மாதமும் 27-ம் தேதி வழங்கப்படுகிறது. அதன்பிறகே, ஊதியப் பட்டியலை கருவூலத் துறைக்கு அனுப்பி ஊதியம் பெறும் நிலை உள்ளது'' என ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆணையாளரின் சுற்றறிக்கை...  இதனிடையே, ஊதியம் தாமதமாக வழங்குவது தொடர்பாக வேளாண் ஆணையாளர் கோசல்ராமன் வெளியிட்ட சுற்றறிக்கை முரண்பாடாக இருப்பதாகவும் ஊழியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

  ""மாத ஊதியத்தை தாமதமின்றி, புகாருக்கு இடம் அளிக்காமல் வழங்க வேண்டும். தாமதம் ஏற்பட்டால் உரிய அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சுற்றறிக்கையில் தெரிவித்து இருந்தார். ""அரசின் அனுமதிக் கடிதம் கிடைக்கப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால்தான் மாத ஊதியத்தை உரிய தேதியில் பெறமுடியவில்லை. ஒவ்வொரு மாதத்தின் 15-ம் தேதிக்குள்ளாகவோ அல்லது ஒரு ஆண்டுக்குச் சேர்த்தோ அனுமதிக் கடிதத்தை வழங்கி விட்டால் ஊதியத்தை உரிய தேதியில் வழங்கி விடலாம்'' என்று வேளாண் துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.