முகப்பு
தமிழ்நாடு

அதிகாரிகள் அதிரடி சோதனை சிவகாசியில் பல பட்டாசு ஆலைகள் மூடல்

சிவகாசி, செப். 9: தொழிற்சாலை ஆய்வகத் துறை அதிகாரிகளின் அதிரடி சோதனையால் சிவகாசி பகுதியில் பல பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.   இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தொழிலாளர்களின் வாழ்க்கையும், சிவகாசி நகர ம

Updated On : 20 செப்டம்பர், 2012 at 10:58 PM
பகிர்:
Updated On : 25 டிசம்பர், 2023 at 9:02 PM

சிவகாசி, செப். 9: தொழிற்சாலை ஆய்வகத் துறை அதிகாரிகளின் அதிரடி சோதனையால் சிவகாசி பகுதியில் பல பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

  இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தொழிலாளர்களின் வாழ்க்கையும், சிவகாசி நகர மக்களின் பொருளாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

  சிவகாசி பகுதியில் சுமார் 650 பட்டாசு ஆலைகள் உள்ளன. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் சிலவற்றில் வெடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அரசு அதிகாரிகள், பட்டாசு குடோன்களில் சோதனை, வீடுகளில் சோதனை, என பல கெடுபிடிகள் செய்யத் தொடங்கினர்.

Advertisement

  இதுதொடர்பாக ஆலை உரிமையாளர்கள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் முறையிட்டனர். இதையடுத்து, பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

  எனினும், கடந்த ஒரு மாத காலமாக தொழிற்சாலை ஆய்வகத் துறையினர் பட்டாசு ஆலைகளில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மருந்து வைக்கும் அறையில் உரிமம் பெற்றதற்கும் கூடுதலாக மருந்து உள்ளது, பட்டாசை மேடையைத் தவிர வேறு இடத்தில் உலர வைத்துள்ளனர் எனக் கூறி தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 87-ஏ-யின்படி 3 நாள்கள் மூட உத்தரவிடுகின்றனர்.

  அந்த 3 நாள்களில் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். பின்னர் ஆய்வு செய்யும்போது மீண்டும் அந்த குறைபாடுகள் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

  பெயர் குறிப்பிட விரும்பாத தொழிற்சாலை ஆய்வகத் துறை அதிகாரி ஒருவர், உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில், சோதனை நடத்தி வருகிறோம். ஆய்வாளர் தலைமையில் நடைபெறும் இந்தச் சோதனையில் ஒவ்வொரு ஆய்வாளரும் தினசரி 3 ஆலைகளை மூட உத்தரவிடுகிறார்கள். இதனால் புதன்கிழமை வரை சுமார் 60 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன என்றார். மேலும் தீபாவளி வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றார்.

  இதனால் சிவகாசி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதோடு, பொருளாதார நிலையும் கேள்விக்குறியாக உள்ளது.

  இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி கூறியதாவது:

  அதிகாரிகளின் கெடுபிடியால் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது மிகவும் சிரமமாகிவிடும். இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பட்டாசு விலை உயர வாய்ப்பு உள்ளது.

  ஆலை உரிமையாளர்கள் வங்கியில் கடன் பெற்று தொழில் நடத்துகின்றனர். தீபாவளி முடிந்ததும் அவர்கள் வங்கிக் கடனைச் செலுத்துவது சிரமமானதாகும். இதுகுறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் கூறியுள்ளோம் என்றார்.

  விபத்து ஏற்பட்டால், அதனைத் தடுக்கும் முறைகளை அரசு சுட்டிகாட்டுவதை விட்டுவிட்டு, ஆலைகளை மூடினால் பலன் கிடைக்குமா என்பதே ஆலை உரிமையாளர்களின் கேள்வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.