மதுரை, செப். 9: மதுரை திருமலை நாயக்கர் மகாலில் மீண்டும் தொடங்கப்படும் ஒலி-ஒளிக் காட்சி நிகழ்ச்சிக்கான கட்டணம் 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிருப்தியடைந்துள்ளனர்.
மதுரையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக மக்களாலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாலும் விரும்பி பார்த்துச்செல்லும் இடமாக திருமலை நாயக்கர் மகால் உள்ளது.
தினமும் மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 40 சதவிகிதம் பேர் திருமலை நாயக்கர் மகாலைப் பார்த்துச் செல்வதாக சுற்றுலாத் துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.
மகாலில் கடந்த 1981-ம் ஆண்டு தொல்பொருள் ஆய்வுக் கழகத்தினரால் ஒலி-ஒளிக் காட்சி அமைப்பு தென்தமிழகத்திலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டது.
திருமலை நாயக்கர் வரலாறு, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் கண்ணகி நீதி கேட்டது என மதுரை நகரின் தொன்மை வரலாற்றை விளக்கும் வகையில் ஒலி-ஒளிக் காட்சி அமைக்கப்பட்டது.
வசனத்தில் காட்சிகள் விளக்கப்பட்டு வரும் நிலையில், நிகழ்வுகள் வண்ண விளக்குகள் ஒளிர விளக்கப்படும். ஆரம்பத்தில் 1 மணி நேரம் நடந்த இக்காட்சி, பின்னர் 30 நிமிடமாக குறைக்கப்பட்டது.
இந்த ஒலி-ஒளிக் காட்சி மாலை, இரவு என 2 வேளைகளில் நடத்தப்பட்டது. மக்கள் வரவேற்பு அதிகரித்ததைத் தொடர்ந்து இக்காட்சியை மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்றது.
பின்னர் மாநில சுற்றுலாத் துறையே ஒலி-ஒளிக் காட்சியை நடத்திவருகிறது. சிறுவர்களுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.10 என கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதற்கிடையே மகாலை சுமார் ரூ.4 கோடியில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன் பணிகள் தொடங்கப்பட்டன.
அப்போது ஒலி-ஒளிக் காட்சிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு சாதனங்கள் பழுதடைந்து இருந்ததால், அதையும் புதுப்பிக்க 2007-ல் திட்டமிட்டு தற்போது புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளன.
அதன்படி புதுதில்லியைச் சேர்ந்த நிறுவனம் மூலம் ரூ.1 கோடியில் நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டு ஒலி-ஒளிக் காட்சி வரும் 12-ம் தேதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தினமும் மாலை 6.45 மணி முதல் இரவு 7.35 மணி வரையில் ஆங்கிலத்திலும், இரவு 8 மணி முதல் 8.50 மணி வரையில் தமிழிலும் ஒலி-ஒளிக் காட்சி காட்டப்பட உள்ளது.
தற்போது 50 நிமிடங்கள் காட்சி காட்டப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கண்ணகி நீதி கேட்ட வரலாறு உள்ளிட்ட சில காட்சியமைப்புகள் நீக்கப்பட்டும் உள்ளன. முழுக்க முழுக்க திருமலை நாயக்கர் மகாலை மட்டுமே வைத்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மதுரை நகரின் வரலாறை முழுமையாக அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்ற புகாரும் எழுந்துள்ளது.
அத்துடன் இதுவரை இல்லாத அளவுக்கு ஒலி-ஒளிக் காட்சி கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.50 எனவும், சிறியவர்களுக்கு ரூ.25 எனவும் உயர்த்தி இருப்பது பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கட்டண உயர்வால், மதுரை நகரில் உள்ள ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் ஒலி-ஒளிக் காட்சியை அதிகம் செலவழித்தே பார்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, புதுதில்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இதே போல கட்டணமே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நீண்ட காலமாக கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது புதிய வடிவமைப்புடன் ஒலி-ஒளிக் காட்சி செயல்படுத்தப்பட உள்ளது. எனவே கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.