முகப்பு
தமிழ்நாடு

பட்டாசு ஏற்றுமதி - அரசு பாராமுகம்!

சிவகாசி, செப். 30:   சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு, மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டுவதில்லை என, பட்டாசு தயாரிப்பாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.   "டமார்' என்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 11:44 PM
பகிர்:
Updated On : 25 டிசம்பர், 2023 at 9:17 PM

சிவகாசி, செப். 30:   சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு, மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டுவதில்லை என, பட்டாசு தயாரிப்பாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

  "டமார்' என்ற பட்டாசு வெடிக்கும் சப்தம் காதில் விழும்போதுதான் ஒரு விழா கொண்டாடியதற்கான முழு நிறைவு ஏற்படுகிறது. இதனால் தானோ என்னவோ, பட்டாசு வெடித்து விழா கொண்டாடும் பழக்கம் உலகம் முழுவதும் உள்ளது.

  ஜரோப்பிய நாடுகளில் விழாக் காலங்களில் பயங்கர சத்தத்தை எழுப்பும் பட்டாசுகளையும் வெடிக்கலாம். ஆனால், பட்டாசு வெடிக்கும் நாள்களை அரசு நிர்ணயம் செய்து கொடுக்கிறது.

Advertisement

  உலக அளவில் சீனா பட்டாசு தயாரிப்பில் முன்னணி வகிக்கிறது. சீனாவில் இருந்து ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி அளவுக்கு உலகம் முழுவதும் பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சிவகாசியில் இருந்தும், சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. கம்பி மத்தாப்பு, அணுகுண்டு உள்ளிட்ட பட்டாசுகளை வெளிநாட்டினர் விரும்பி இறக்குமதி செய்தனர்.

  இங்கு, அலுமினியப் பவுடரை அடிப்படையாகக் கொண்டு பட்டாசுகள் தயாரிக்கப்படுவதால், அவை தீப் பற்றவைத்தால்தான் வெடிக்கும். எனவே, இந்த ரக பட்டாசுகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது.

  உலக வர்த்தகமயமாக்கலுக்குப் பின்னர், இந்திய அரசு பட்டாசு ஏற்றுமதிக்கு பல நிபந்தனைகளை விதித்தது.

  வெளிநாடுகளில் இருந்து ஆர்டர் பெறவேண்டுமானால், இங்கிருந்து அந்த நாட்டுக்கு மாதிரி பட்டாசுகளை அனுப்ப வேண்டும். சீனா விமானம் மூலம் மாதிரி பட்டாசுகளை அனுப்புகிறது. ஆனால், இந்திய அரசு மாதிரி பட்டாசுக்கு தனி கன்டெய்னர் மூலம் கப்பலில் அனுப்பும்படி அறிவுறுத்துகிறது. இதனால், ஆர்டர் கிடைப்பதில் காலதாமதமாகிறது. மேலும், பட்டாசுகளை கப்பலில் அனுப்பி வைக்க அருகிலுள்ள தூத்துக்குடி துறைமுகம் வசதியாக இருக்கும். ஆனால், இலங்கைப் பிரச்னையை காரணம் காட்டி தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து பட்டாசு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

  இதனால், பட்டாசு ஏற்றுமதி செய்ய மும்பை துறைமுகம் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கும் குறிப்பிட்ட கப்பலில் தான் பட்டாசுகளை ஏற்ற முடியும். மேலும், அந்தக் கப்பல் வரும்வரை பட்டாசுகளை பாதுகாப்பதற்கு குடோன் யாரும் கொடுக்க முன்வருவதில்லை.

  இதுபோன்ற பல காரணங்களால், சிவகாசியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த பட்டாசு ஏற்றுமதியானது நாளடைவில் சிறிது, சிறிதாகக் குறைந்து தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது.

  எனவே, சிவகாசி தொழிலதிபர்கள் சீனாவில் பட்டாசு ஆலை அமைத்து, அங்கிருந்து வெளிநாடுகளுக்குப் பட்டாசுகளை ஏற்றுமதி செய்கின்றனர்.

  இதுகுறித்து, பட்டாசு தயாரிப்பாளர்களில் ஒருவரான சீனிவாசன் கூறியதாவது:

  சிவகாசியிலிருந்து தற்போது பட்டாசு ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. ஏற்றுமதிக்கு மும்பை துறைமுகத்தில் கப்பல் கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்களே இதற்குக் காரணம்.

  மத்திய அரசு ஒத்துழைப்பு தந்தால், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு பட்டாசு ஏற்றுமதியாகும். இதனால், அன்னியச் செலாவணியும் பெருகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.