சேலம், ஏப். 20: தமிழக அனல் மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் ஆயிரக்கணக்கான டன் நிலக்கரி சாம்பல், சிமென்ட் ஆலைகளுக்கு சலுகை விலையில் வழங்கப்படுவதால் மின் வாரியத்துக்கு நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகத் தெரியவருகிறது.
தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, மேட்டூர், எண்ணூர், வட சென்னை ஆகிய 4 அனல் மின் நிலையங்கள் மூலம் நாளொன்றுக்கு தமிழகத்துக்குத் தேவையான மின்சாரத்தில் 29 சதவீதம் (சுமார் 3 ஆயிரம் மெகா வாட்) உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு சுமார் 1.5 கோடி டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது.
இவை யாவும் வட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. போக்குவரத்து செலவையும் சேர்த்து அனல் மின் நிலையத்துக்கு வரும் ஒரு டன் நிலக்கரியின் விலை ரூ.1,500 ஆக உள்ளது. ஆனால் வாங்கப்படும் நிலக்கரியில் சுமார் 30 சதவீதம் அளவுக்கு சாம்பல் கலந்துதான் வருகிறது.
10 ஆயிரம் டன் சாம்பல்: சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தினசரி 840 மெகா வாட் மின் உற்பத்தி கிடைக்க 14 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் இங்கு நாளொன்றுக்கு சுமார் 3,500 முதல் 4 ஆயிரம் டன் வரை நிலக்கரி உலர் சாம்பல் கிடைக்கிறது. இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள 4 அனல் மின் நிலையங்கள் மூலம் சுமார் 10 ஆயிரம் டன் வரை சாம்பல் கிடைக்கிறது. சிமென்ட் தயாரிப்பில் இந்த சாம்பல் முக்கியப் பொருளாக உள்ளது.
போர்ட்லேண்ட் சிமென்ட்டில் 40 சதவீதம் வரை உலர் சாம்பல் சேர்க்கப்படுகிறது. மேலும் உலர் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் செங்கற்கள் (பிளை ஆஷ் பிரிக்ஸ்), ஹாலோ பிரிக்ஸ் கற்களின் பயன்பாடும் இப்போது மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் இந்தத் தொழிற்சாலைகளுக்கு உலர் சாம்பலின் தேவை அதிகரித்துள்ளது. வெளி மார்க்கெட்டில் டன் அதிகபட்சம் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படும் இந்த உலர் சாம்பல், தமிழகத்தின் 4 அனல் மின் நிலையங்களில் இருந்தும் குறிப்பிட்ட இரண்டு சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் டன் வெறும் ரூ.250 என்ற விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலர் சாம்பலை ஆலையில் இருந்து அகற்றினால் போதும் என்ற நிலை இருந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் மினிமம் பட்ஜெட் செலவு செய்து அனல் மின் நிலையங்களில் சாம்பலை சேகரிக்கும் சாதனத்தைப் பொருத்தி உலர் சாம்பலை சேகரித்து வந்தனர்.
டன்னுக்கு ரூ.60 சேவைக் கட்டணம்: இவ்வாறு சேகரிக்கப்படும் சாம்பலுக்கு டன்னுக்கு ரூ.60 மட்டுமே சேவைக் கட்டணமாக செலுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலர் சாம்பலில் 10 சதவீதத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் செங்கல் தயாரிக்கும் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. மீதமுள்ள சாம்பலை என்ன விலைக்கு விற்கலாம் என்று மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தது.
இதையடுத்து ஆய்வு செய்த அரசு, சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சாம்பலின் விலையை ரூ.60-ல் இருந்து ரூ.250 ஆக உயர்த்தியது.
ரெடிமிக்ஸ், செங்கல் தயாரிக்கும் பெரிய நிறுவனங்களுக்கு டன் ரூ.350-க்கும், உலர் சாம்பலைப் போன்றே ஆனால் குறைந்த அளவே கிடைக்கும் ஈர சாம்பலை டன் ரூ.30 என்ற விலையிலும் விற்பனை செய்ய மாநில அரசு முடிவு செய்தது.
சிறு தொழிற்சாலைகளுக்கு இல்லை: ஆனால் இப்போது சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு தேவையான அளவு சாம்பல் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுதற்கு பதிலாக டன் ரூ.100 என்ற விலைக்கே விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதுவும் முன் பணமாக ரூ.20 ஆயிரம் செலுத்துபவர்களுக்குதான் சாம்பல் கிடைக்கும் என்ற நிலையும் சிறு தொழிலதிபர்களுக்கு உள்ளது.
சிறு தொழில் செய்பவர்கள் என்ற போர்வையில் குறைந்த விலைக்கு சாம்பலைப் பெறுபவர்கள், அவற்றை பல மடங்கு விலை வைத்து தங்களுக்கே வழங்கி வருவதாகவும், சாம்பலை தங்களுக்கு வழங்குவதை குறைத்துக் கொண்டு அரசுக்கு நெருங்கிய சிமென்ட் தயாரிப்பாளர்களுக்கு வழங்கி வருவதாகவும் பிளை ஆஷ் செங்கல் தயாரிப்பாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ரூ.1,500-க்கு தேவை உள்ளது: அனல் மின் நிலையங்களில் இருந்து சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் டன் ரூ.250-க்கு சாம்பலைப் பெறுகின்றன. தமிழகத்தில் இப்போது ஒரு மூட்டை சிமென்ட் சராசரியாக ரூ.280-க்கு விற்பனையாகிறது.
சிமென்டில் 40 சதவீதம் இந்த சாம்பல்தான் உள்ளது. அதாவது ஒரு டன் சாம்பல் சிமென்டுடன் கலக்கப்படும்போது அதன் விலை ரூ.2,200 ஆக உயருகிறது.
இதனால்தான் ரெடிமிக்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரு டன் சாம்பலை ரூ.1,500-க்கு பெறவும் தயாராக உள்ளன. இதற்காக அனல் மின் நிலையங்களில் சாம்பல் பெறும் உரிமத்தை பொது ஏலம் வைத்து முடிவு செய்ய அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதால் மானிய விலைக்கே சாம்பலை விற்க முடியும் என்று மின்வாரியம் கூறி வருகிறது.
இது குறித்து மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது:
அனல் மின் நிலையங்களில் இருந்து கழிவாகக் கிடைக்கும் சாம்பலில் 10 சதவீதத்தை பதிவு செய்துள்ள சிறு, குறு தொழில் முனைவோருக்கு வழங்கி வருகிறோம். அனல் மின் நிலையங்களில் சாம்பல் சேகரிக்கும் மையம் அமைத்துள்ள 2 சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கு டன் ரூ.250 என்ற விலைக்கு விற்பனை செய்து வருகிறோம்.
அவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளனர். 2011-ல் அவர்களின் ஒப்பந்தம் முடிவடைந்த பின்னரே டெண்டர் விட்டு சாம்பல் பெறுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
ஆண்டுக்கு ரூ.450 கோடி இழப்பு
வெளி மார்க்கெட்டில் டன் ரூ.1,500 வரை எளிதில் விலை போகும் சாம்பல், சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.250-க்கே விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் ரூ.1.25 கோடி வரை மின் வாரியத்துக்கு இழப்பு ஏற்படுகிறது. நஷ்டத்தில் இயங்குவதால் மின் கட்டணத்தை உயர்த்தப்போவதாக கூறி வரும் மின் வாரியம், வெளி மாநிலங்களில் மின்சாரத்தை விலைக்கு வாங்கும் ஒப்பந்தத்தையே அடிக்கடி மாற்றி அமைக்கிறது. ஆனால் ஆண்டுக்கு சுமார் ரூ.450 கோடி வருவாயை தெரிந்தே இழக்கக் காரணமாக இருக்கும் இந்த பழைய ஒப்பந்தத்தை ஏன் மாற்றி அமைக்கக் கூடாது என்ற கேள்வியையும் செங்கல் தயாரிப்பாளர்கள் எழுப்புகின்றனர்.
சாம்பல் சேகரிக்கும் மையம் அமைத்த காலத்தில் அவற்றை இலவசமாக அள்ளிக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போடப்பட்டு, பின்னர் டன்னுக்கு ரூ.60 ஆகவும், இப்போது ரூ.250 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் மின்வாரியமோ ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை மீற முடியாது என்று கூறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.