முகப்பு
தமிழ்நாடு

அகத்தியர் தரிசன யாத்திரைக்குத் தடை

அம்பாசமுத்திரம், ஏப். 25:  மேற்குத் தொடர்ச்சி மலையில் பொதிகை மலைக்கு பக்தர்கள் சித்திரை மாதத்தில் யாத்திரை சென்று அகத்திய முனிவரை தரிசனம் செய்வது வழக்கம். அதிக அளவில் பக்தர்கள் செல்வதால் சுற்றுச்சூழல்

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:39 PM
பகிர்:

அம்பாசமுத்திரம், ஏப். 25:  மேற்குத் தொடர்ச்சி மலையில் பொதிகை மலைக்கு பக்தர்கள் சித்திரை மாதத்தில் யாத்திரை சென்று அகத்திய முனிவரை தரிசனம் செய்வது வழக்கம். அதிக அளவில் பக்தர்கள் செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என இந்த ஆண்டும் வனத் துறை அனுமதி மறுத்துள்ளது.

 மேற்குத் தொடர்ச்சி மலையில் பொதிகை மலை 6,125 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அகத்திய முனிவருக்கு முதல்முறையாக 1970-ல் சிலை நிறுவப்பட்டது. பின்னர் 1985-ம் ஆண்டுக்குப் பின்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைதான் தற்போது அங்கு உள்ளது.

 "சிவபெருமான் திருமணத்தையொட்டி தென்புறம் உயர்ந்ததால், வடக்கும் தெற்கும் சமமாக அகத்திய முனிவரை சிவபெருமான் பொதிகை மலைக்கு அனுப்பி வைத்தார். பொதிகைமலை வந்த அகத்திய முனிவர், சிவபெருமானை வேண்டி தான் கமண்டலத்தில் கொண்டு வந்த நீரைக் கவிழ்த்து தாமிரபரணி நதியை உருவாக்கினார்' என்று புராணம் கூறுகிறது.

 அகத்திய முனிவரின் அருளால்தான் சிவபெருமானின் திருவடிகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையில் பொதிகை மலைக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பக்தர்கள் யாத்திரை சென்று அகத்திய முனிவரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த பயணத்தை ஆன்மிக யாத்திரையாகக் கருதினாலும் நாளடைவில் பொதிகைமலைக்கு யாத்திரை செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இந்த யாத்திரையில் பங்கேற்றனர்.

 அகத்திய முனிவரை மதத்துக்கு அப்பாற்பட்டு தமிழ்க் குருவாக கருதி பொதிகை மலை யாத்திரையில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கலந்து கொள்கின்றனர். மேலும் பொதிகை மலைக்கு யாத்திரை செல்வதன் மூலம் உடலும், உள்ளமும் புத்துணர்வு பெறுகிறது. பயணத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிகிறது. மாசு படாத தாமிரபரணி நீரைப் பருகலாம். மூலிகைச் சூழலால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது என பக்தர்கள் கருதுகின்றனர்.

 பாபநாசம் அணையில் இருந்து புறப்படும் பக்தர்கள் முதலில் 1867 அடி உயரத்தில் உள்ள துலக்க மொட்டை என்ற மலைக்குச் செல்கின்றனர். பின் அங்கிருந்து 2360 அடி உயரத்தில் இருக்கும் கன்னிக்கட்டி என்ற பகுதியை அடைகின்றனர். அங்குள்ள வனபங்களாவில் ஒரு நாள் இரவு தங்கும் பக்தர்கள் அடுத்த நாள் கன்னிகட்டி ஆறு, பேயாறு வழியாக 3100 அடி உயரத்தில் உள்ள கல்லாறு என்ற இடத்தை அடைகின்றனர்.

 அங்கிருந்து கேரள வனப்பகுதி தொடங்குகிறது. அபாயகரமான பாதை வழியாக பொதிகைமலை உச்சியை அடைந்து அங்கு அகத்திய முனிவரை தரிசனம் செய்கின்றனர். பாபநாசம் அணையில் இருந்து பொதிகை மலை 42 கி.மீ தொலைவில் உள்ளது. அகத்தியரை தரிசிக்கும் பக்தர்கள் இரவு அங்கு தங்கிவிட்டு அடுத்த நாள் பாபநாசம் வந்தடைகின்றனர். பொதிகை மலை செல்லும் வழியில் நாகபொதிகை, ஐந்து தலை பொதிகை போன்ற மலைச் சிகரங்களையும் தரிசிக்கின்றனர்.

 அடர்ந்த காட்டில் இந்த மலை வழிப்பயணத்தில் குளிர், கோடை மழை என வெப்பநிலை எப்படி இருந்தாலும் உடல்நலம் பாதிக்கப்படுவதில்லை. பல ஆண்டுகளுக்கு முன் பொதிகை மலைக்கு பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள பக்தர்கள் யாத்திரை செல்லத் தொடங்கினர். நாளடைவில் பொதிகைமலை பயண அனுபவத்தை உணர தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும், புதுவை, பெங்களூரில் இருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கினர்.

 பொழுதுபோக்காக சுற்றுலா செல்லும் நோக்கத்தில் செல்வோர் யாத்திரையைத் தொடர்வதில்லை என்றும் பக்தர்கள் தெரிவித்தனர். 2008 வரை பாபநாசம் வழியாக பொதிகைமலை யாத்திரை செல்ல அனுமதித்த தமிழக வனத் துறை கடந்த 2 ஆண்டுகளாக தடை விதித்துள்ளது. 2008-ல் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் செல்ல வனத் துறை அனுமதி வழங்கியது. அதைப் பின்பற்றி பக்தர்கள் சென்று திரும்பினர். ஆனால், தற்போது அனுமதி மறுக்கப்படுவதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →