தமிழ்நாடு

கோவை திமுக பொதுக்கூட்டத்தில் மைனாரிட்டியை மெஜாரிட்டியாக்க அறைகூவல்!

திமுக நடத்துவது போட்டிக் கூட்டம் அல்ல என்று திமுக தலைவர்கள் பேசினாலும், கோவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்வுகள் அனைத்துமே அதிமுகவுக்குப் பதில் சொல்வதாகவே அமைந்திருந்தது.  கோவையில் திமுக

சிவ. மணிகண்டன்

திமுக நடத்துவது போட்டிக் கூட்டம் அல்ல என்று திமுக தலைவர்கள் பேசினாலும், கோவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்வுகள் அனைத்துமே அதிமுகவுக்குப் பதில் சொல்வதாகவே அமைந்திருந்தது.

 கோவையில் திமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு, திமுக நிர்வாகிகள் மட்டுமன்றி அனைத்துக் கட்சியினருக்கும், ஏன் அனைத்துத் தரப்பினருக்குமே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. "அதே அளவுக்கு' கூட்டம் வருமா? இல்லை அதைவிட அதிகமாக இருக்குமா? என்று ஆளாளுக்குப் பட்டிமன்றம் நடத்தத் தொடங்கிவிட்டனர். பொதுக்கூட்டம் நடைபெறும் வஉசி பூங்கா மைதானம் நிரம்பி வழிய வேண்டும் என்று நிர்வாகிகள் மேற்கொண்ட சிரத்தை, அவர்களுக்கு கைகொடுத்தது.

திங்கள்கிழமை பிற்பகலில் இருந்தே பல ஊர்களில் இருந்தும் பொதுக்கூட்டத்துக்கு வாகனங்கள் வந்த வண்ணம் இருந்தன. பஸ், லாரி, வேன்கள் என வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்களால் நகரின் முக்கியச் சாலைகள் நிரம்பின. ரேஸ்கோர்ஸ், பாலசுந்தரம் சாலை, நவஇந்தியா, உசூர் சாலை, ஏடிடி காலனி பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசை கட்டி நின்றதைக் காண முடிந்தது. தொண்டர்கள் வெள்ளத்தில் வஉசி பூங்கா மைதானம் நிரம்பியிருந்தது. பூங்காவுக்கு வெளியே அவிநாசி சாலையிலும், எல்ஐசி சாலையிலும் கூட்டம் இருந்தது.

எல்லாம் அதே மாதிரி: கோவையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக  பொதுக்கூட்டப் பேச்சுகளே எதிரொலித்துக் கொண்டிருந்த நிலையில், அதற்குப் பதில் கொடுக்க வேண்டும் என திமுக எடுத்த முடிவு தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு இரு நாள்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்ற முன்னேற்பாடு கூட்டங்களில் பேசிய உள்ளூர் தலைவர்கள் இதை வெளிப்படையாகவே கூறினர்.

 அதன் வெளிப்பாடாக வஉசி பூங்கா மைதானத்தில், பொதுக்கூட்ட மேடையில் இருந்து அனைத்து அம்சங்களும் அதிமுக கூட்டத்தில் இருந்ததைப் போலவே அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே இடத்தில் மேடை, மேடையின் பின்பக்கத்தில் முதல்வர் கருணாநிதியின் பெரிய படம் பிரிண்ட் செய்யப்பட்ட பிளக்ஸ் என ஒவ்வொரு அம்சங்களும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருந்தன.

பழக்கப்பட்ட மேடைதான்: முதல்வர் கருணாநிதி என்ன பேசப் போகிறார் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. வரலாற்றில் இடம் பெற்றுள்ள தலைவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லிப் பழக்கப்பட்டதுதான் திமுக மேடை என்று கூறிய துணை முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பேசுவதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என தொண்டர்களை அமைதிப்படுத்தினார்.

மத்திய அமைச்சர் ஆ. ராசா, உயர் கல்வி அமைச்சர் க. பொன்முடி ஆகியோரது பேச்சில் அதிமுக மீதான கோபம் இயல்பாக இருந்ததில் ஆச்சரியம் இல்லை. நிறைவுரையாற்றிய முதல்வர் கருணாநிதியே அதைச் சுட்டிக் காட்டிப் பேசினார்.

 அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் எஸ். முத்துசாமி, சற்று கூடுதலாகவே நேரத்தை எடுத்துக் கொண்டார். திமுக அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் வரிசையாகப் பட்டியலிட்டார். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லையென்றாலும், திமுகவில் இணைந்துவிட்ட திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி. கோவிந்தசாமி, அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்களை வேலைநீக்கம் செய்த விதத்தையும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் இப்போதைய கொள்கை நிலைப்பாட்டையும் விமர்சிக்கத் தவறவில்லை.

மெஜாரிட்டியாக்க வேண்டும்: பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் என திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதற்கு நாங்கள்தான் காரணம் என தன்னோடு உள்ளூர் திமுக நிர்வாகிகளையும் குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் மு. கண்ணப்பன், இனி அந்த நிலையை ஏற்படுத்தமாட்டோம் என்று முதல்வருக்கு உறுதிமொழி கொடுத்தார்.

கோவை பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியபோது, முதல்வர் கருணாநிதியின் குடும்பம் குறித்தும், மைனாரிட்டி அரசு என்று கூறியதற்கும் பதிலளிப்பதாகவே அமைந்தது முதல்வரின் உரை. மைனாரிட்டி திமுக அரசு என்று இனி சொல்லக்கூடிய நிலையை ஏற்படுத்திவிடக் கூடாது. பெரும்பான்மை கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டார்.

  ஜெயலலிதா பங்கேற்ற அதிமுகவின் விலைவாசி உயர்வு எதிர்ப்புக் கண்டனக் கூட்டத்தின் தாக்கம்தான், திமுகவை இப்படி ஒரு போட்டிக் கூட்டம் நடத்த வைத்திருக்கிறது என்பது  அனைவரும் பேசிய பேச்சுக்களிலிருந்து தெளிவாகியது.

மைனாரிட்டியை மெஜாரிட்டியாக்குவதன் மூல்ம்தான் ஜெயலலிதாவுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்பதுதான் கோவையில் திமுக நடத்திய கூட்டம் வெளியிட்ட செய்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT