பிஎஸ்என்எல் சேவை மேம்படுமா?
பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்த வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். தனியார்மயமும், தாராளமயமும் அரசின் பல்வேறு
தமிழ்நாடுபிஎஸ்என்எல் சேவை மேம்படுமா?
பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்த வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். தனியார்மயமும், தாராளமயமும் அரசின் பல்வேறு
பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்த வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தனியார்மயமும், தாராளமயமும் அரசின் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளிவரும் நிலையில், தொலைத்தொடர்பு துறையும் சீரழிந்து வருகிறது. பேராவூரணி நகரில் தொலைபேசி நிலையமாகத் தொடங்கி, பிறகு தரம் உயர்த்தப்பட்டு, தற்போது துணைக் கோட்ட அலுவலகமாக பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.
இந்தத் துணைக் கோட்ட அலுவலகத்தில் ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், ஆவணம், படப்பனார்வயல், பெருமகளூர் உள்ளிட்ட தொலைபேசி நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கோட்ட அலுவலகம் உதவிக் கோட்டப் பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் செயல்பட்டு வருகிறது.
இரண்டாயிரத்திற்கும் மேல்பட்ட செல்போன் இணைப்புகளும், 1600 தரைவழி இணைப்புகளும், 150-க்கும் மேற்பட்ட வலைத்தள இணைப்புகளும் உள்ளன. இந்த இணைப்புகள் அனைத்திலும் நாள்தோறும் ஏதேனும் பிரச்னை இருந்துகொண்டே இருக்கிறது.
பழுதடைந்த இணைப்புகளை சரிசெய்ய மாதக்கணக்கில் கால அவகாசம் எடுத்துக் கொள்கின்றனர். எத்தனை முறை நேரில் சென்று கூறினாலும், உடனடியாக எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
கடந்த 5-ம் தேதி பேராவூரணி சேது சாலை சந்திப்பில் சாலையை அகலப்படுத்துவதற்காக இயந்திரம் மூலம் குழி தோண்டிய போது, அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, பட்டுக்கோட்டை பிரதான சாலை, சேது சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் தொலைபேசி, வலைத்தள இணைப்புகள் முற்றிலும் செயலிழந்துபோயின. இதனால், வர்த்தகர்களும், பொதுமக்களும், அரசு அலுவலர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் பல முறை புகார் கூறியும், கடந்த 18-ம் தேதிதான் பழுதடைந்த இணைப்புகள் சரிசெய்யப்பட்டன.
மேலும், செல்போன் உபயோகிப்பாளர்கள் எப்போது பி.எஸ்.என்.எல். எண்ணைத் தொடர்பு கொண்டாலும், முதல் முறை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றும், மறு முறை தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் என்றும் கூறிய பிறகு, மூன்றாவது முறையாக முயற்சி செய்யும்போது மட்டுமே பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த நிலை செல்பேசி சுவிட்ச் ஆப் செய்யாத நிலையிலும், தொலைபேசிக் கோபுரங்களிலிருந்து சமிக்ஞை நன்றாக கிடைக்கக்கூடிய இடத்தில் இருக்கும்போதும் தொடர்ந்து நிகழ்கிறது.
இதுகுறித்து பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் வை. சிதம்பரம் கூறியது:
கடந்த பல மாதங்களாக பி.எஸ்.என்.எல். செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் சிறந்த சேவை மற்றும் சலுகை அளித்து வரும் நிலையில், பி.எஸ்.என்.எல். செயல்பாடு மிகவும் தரமற்றதாக உள்ளது. பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சரியான சேவை அளிக்காவிட்டால், வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். இணைப்பிலிருந்து, வேறு தனியார் நிறுவன இணைப்புக்கு மாறு வாய்ப்பு உருவாகலாம் என்றார்.
எனவே, பி.எஸ்.என்.எல். உயர் அதிகாரிகள் பேராவூரணி கோட்ட அலுவலகத்தில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.