குறுவை நெல் கொள்முதல் எப்போது?
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை சாகுபடி நெல் கொள்முதலுக்காக நுகர்பொருள் வாணிபக் கழகக் கொள்முதல் நிலையங்கள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர் விவசாயிகள். விவசாயி
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை சாகுபடி நெல் கொள்முதலுக்காக நுகர்பொருள் வாணிபக் கழகக் கொள்முதல் நிலையங்கள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர் விவசாயிகள்.
விவசாயிகளுக்கு நெல்லுக்கு உரிய விலை கிடைக்க காரணமாக இருப்பவை நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கொள்முதல் நிலையங்கள்தான். புதுக்கோட்டை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், சம்பா சாகுபடி நெல் கொள்முதல் 60 இடங்களிலும் குறுவை சாகுபடி நெல் கொள்முதல் 10 இடங்களிலும் நடைபெறும்.
இதில் குறுவை சாகுபடிக்கான நெல் கொள்முதல் அன்னவாசல், நெடுவாசல், வல்லத்திராகோட்டை, மழையூர், பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், திருவப்பாடி, சுப்பிரமணியபுரம், வைரிவயல், கலியராயன்விடுதி ஆகிய இடங்களில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கமாகும்.
ஆனால், நிகழாண்டில் இதுவரை இந்த மாவட்டத்தில் எந்த இடத்திலும் நெல் கொள்முதல் நடைபெறவில்லை. அதே சமயம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வழக்கம்போல உரிய இடங்களில் நெல் கொள்முதல் நடைபெறுகிறநது.
இது புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளிடத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிகழாண்டு குறுவை சாகுபடி நெல் கொள்முதல் உண்டா, இல்லையா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.பி. முத்துக்குமரன் கூறியது:
""எத்தனையோ பிரச்னைகளுக்கு மத்தியிலும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நிகழாண்டில் ஏறத்தாழ 4 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ளனர். ஆனால், நுகர்பொருள் வாணிபக் கழகம் இன்னமும் கொள்முதலைத் தொடங்கவில்லை.
இதனால், வெளிச்சந்தையில் கட்டுப்படியாகாத விலைக்கு நெல்லை வியாபாரிகளிடம் விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நுகர்பொருள் வாணிபக் கழகம் வழக்கம்போல நெல் கொள்முதலைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் அவர்.