முகப்பு
தமிழ்நாடு

பணிநியமன உத்தரவுக்காக காத்திருக்கும் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்கள்

சங்கரன்கோவில்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4-ல் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்கள் தேர்வில் தேர்வானோர் ஒன்றரை ஆண்டுகளாக பணி நியமன உத்தரவு கிடைக்காததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:35 PM
பகிர்:

சங்கரன்கோவில்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4-ல் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்கள் தேர்வில் தேர்வானோர் ஒன்றரை ஆண்டுகளாக பணி நியமன உத்தரவு கிடைக்காததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

27.1.08-ல் குரூப் 4 தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்குத் தேர்வு நடைபெற்றது. முடிவுகள் 7.11.08-ல் வெளியானது.

இதில் தட்டச்சர் பதவிக்கு 507 பேரும், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 93 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக 1.04.09-ல் தேர்வாணையம் அறிவித்தது.   

தேர்வெழுதி 3 ஆண்டுகளாகவும், காத்திருப்போர் பட்டியல் அறிவித்து ஒன்றரை ஆண்டுகளாகவும் காத்திருக்கும் இவர்களுக்கு இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை.

குரூப் 4 தேர்வுக்குப் பிறகு தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட பல தேர்வுகளுக்கும் முடிவுகள் வெளியிடப்பட்டு, தேர்வானோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் அதற்கு முன்பு நடைபெற்ற தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்குத் தேர்வானோர், சான்றிதழ் சரிபார்ப்புக்குக்கூட அழைக்கப்படவில்லை.அறிவிக்கப்பட்ட காலியிடங்களைவிடக் குறைவானோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் சூழ்நிலையில், அதில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ளோரை நியமிப்பது வழக்கம். அதன் அடிப்படையிலும் தாங்கள் நியமிக்கப்படவில்லை என தேர்வானோர் தெரிவித்தனர்.

இவர்களில் சிலர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பணி நியமன உத்தரவு வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இதற்கு தேர்வாணையம் அளித்த பதிலில், காத்திருப்போர் பட்டியலில் இருந்து தெரிவு செய்வது தொடர்பாக நடவடிக்கை  மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சிலர் தேர்வாணையத்தில் விவரங்களைக் கேட்டபோது, காத்திருப்போர் பட்டியல் செயலாக்கத்தில் உள்ளதாக தேர்வாணையம் குறிப்பிட்டுள்ளது. இருந்தும் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்குத் தேர்வானோருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சிலர் பணி நியமன உத்தரவு வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை என காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது,

தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணி நியமனம் நடவடிக்கையில் இருப்பதாகத் தெரிவித்தனர்.

பணி நியமன உத்தரவு தாமதத்தால் தேர்வானோரும் அவர்களது குடும்பத்தினரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்கள் அதிகம் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், காத்திருப்போர் பட்டியலில் உள்ள தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்குத் தேர்வானோருக்கு பணி நியமன உத்தரவை வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

முழு கட்டுரையைப் படிக்க →