நிகர்நிலை பல்கலைக்கழகம் நேர்காணலுக்கு தயக்கம்
தகுதியிழப்புக்கு உள்ளாகும் வாய்ப்புள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதைச் சார்ந்த கல்லூரிகளுக்கு சென்று கம்ப்யூட்டர் பட்டதாரிகளை வேலைக்குத் தேர்வு செய்யும் பணிகளை மென்பொருள் நிறுவனங்கள்...
சென்னை, ஜன. 21: தகுதியிழப்புக்கு உள்ளாகும் வாய்ப்புள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதைச் சார்ந்த கல்லூரிகளுக்கு சென்று கம்ப்யூட்டர் பட்டதாரிகளை வேலைக்குத் தேர்வு செய்யும் பணிகளை மென்பொருள் நிறுவனங்கள் ஒத்திவைக்கத் தொடங்கியுள்ளன.
கட்டமைப்பு வசதிகள் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் நாடு முழுக்க 40-க்கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அந்தத் தகுதியில் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை சமர்ப்பித்தது. தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 17 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பறிக்கப்படும் சூழ்நிலையில் தங்களின் எதிர்கால வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று கருதி கடந்த இரு தினங்களாக சென்னை, சேலம், தஞ்சாவூர் பகுதிகளில் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தினர்.
சென்னையில் புதன்கிழமை ஆலோசனை நடத்திய இந்தக் கல்வி நிலையங்களின் நிர்வாகிகள், இதுபற்றி முதல்வர், பிரதமர் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்துப் பேச முடிவு செய்தனர்.
போராட்டங்கள் நின்றுவிட்ட போதிலும், மாணவர்களுக்கு உடனடி பாதிப்பாக, வேலைவாய்ப்பு நேர்காணல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பதாக இருந்த வளாக நேர்காணல் தேர்வை முன்னணி மென்பொருள் நிறுவனம் ஒன்று ஒத்திவைத்துவிட்டது. இதேபோல அடுத்தடுத்து இந்த 17 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நடக்கவுள்ள நேர்காணல்களில் பலவற்றை ஒத்திவைக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கல்லூரிகளாக இருந்தபோது சிறப்பாக இயங்கியதாகக் கூறி நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை இந்தக் கல்வி நிலையங்கள் பெற்றன.
இங்கு படித்தால் வேலை வாய்ப்புக்கு அதிக வாய்ப்புள்ளதாக மாணவர்கள் கருதியதால், அரசின் மேற்பார்வையில் இயங்கும் கல்லூரிகளைவிட கூடுதல் கட்டணமாக இருந்தாலும், இவற்றில் சேர்ந்தனர்.
நடுத்தர குடும்பத்துப் பிள்ளைகள்தான் இவ்வாறு அதிக அளவில் படிக்கின்றனர். வங்கிகளில் கடன் வாங்கி படித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் வேலைவாய்ப்பு தள்ளிப்போகும் என்ற தகவல் மாணவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என பெற்றோர்கள் கூறுகின்றனர்.
வேலை வாய்ப்பு தள்ளிப்போகுமே தவிர, வேலை கிடைக்காமல் போய்விடாது என்று சென்னையைச் சேர்ந்த ருதா கணினி நிறுவன மனிதவள பிரிவு மேலாளர் சஞ்சய் வில்லியம்ஸ் கூறினார்.
இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்தானால்கூட, இந்தக் கல்லூரிகள் தொடர்ந்து செயல்படும் என்றும், அவை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் பெற்று செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற கேள்விக்கு இடமில்லை என்றார் சஞ்சய்.
பெரிய மென்பொருள் நிறுவனங்களின் அதிகாரிகளும் இதே கருத்தைக் கூறுகின்றனர்.
உடனடியாக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது தள்ளிப்போவதைத் தவிர்க்க முடியாது என்றும் அவர்கள் கூறினர்.
இத் துறையில் வல்லுநர்கள் தேவை என வரும்போது தானாக எல்லோருக்கும் வேலை கிடைக்கும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து நீடிக்குமா, ரத்து செய்யப்படுமா என்ற விவகாரத்தில் அரசு விரைவாக முடிவை அறிவித்தால் தங்களுக்கு உடனடியாக வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.