முகப்பு
தமிழ்நாடு

ரூ.3-க்கு 700 பக்கங்கள்: மக்கள் பார்வையில் படாமல் மறையும் பேரவை நடவடிக்கைகள் புத்தகம்

சென்னை, ஜூலை 8: சென்னையில் உள்ள சட்டப் பேரவைக்கு வர முடியாதவர்கள் அங்கு நடக்கும் சூடான, சுவையான விவாதங்களை புத்தகங்களாகப் பெற முடியும். அதுவும், ஒரு டீ-யின் விலையை விடக் குறைவாக 3 ரூபாய்க்கே கிடைக்கிற

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:37 PM
பகிர்:

சென்னை, ஜூலை 8: சென்னையில் உள்ள சட்டப் பேரவைக்கு வர முடியாதவர்கள் அங்கு நடக்கும் சூடான, சுவையான விவாதங்களை புத்தகங்களாகப் பெற முடியும். அதுவும், ஒரு டீ-யின் விலையை விடக் குறைவாக 3 ரூபாய்க்கே கிடைக்கிறது.

ஆனால், இந்தப் புத்தகங்கள் இத்தனை குறைவான விலைக்குக் கிடைக்கிறது என்பதும், அதில் உள்ள அரிய தகவல்களும் மக்களுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்பதே கவலை அளிக்கும் விஷயம்.

தமிழக சட்டப் பேரவைக்கென்று பாரம்பரியமிக்க வரலாறு உண்டு. பேரவையில் குளிர்காலத் தொடர், பட்ஜெட் தொடர் என பல்வேறு கூட்டத் தொடர்கள் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்வர். பேரவை மாடத்தில் அமர்ந்து சிறப்பு அழைப்பாளர்களும், பொது மக்களும் பேரவை நிகழ்வுகளைக் கவனிப்பர்.

பேரவை நிகழ்வுகளைக் கவனிக்க பொது மக்களுக்கு முழுமையான நேரம் கொடுக்கப்படாது. குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அவர்கள் வெளியேற்றப்படுவர். அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அரசியலில் ஆர்வம் உள்ளவர்களைத் தவிர்த்து பொது மக்களும் பேரவை நிகழ்வுகளை உற்று நோக்குவர்.

  பேரவையில் சுவாரஸ்யமான நிகழ்வு அல்லது உரை நடைபெறும்போது, அனுமதி நேரம் முடிந்து விட்டதாகக் கூறி பொது மக்களை பேரவைக் காவலர்கள் வெளியேற்றுவர். அந்த சமயத்தில் ஏமாற்றத்துடன் வெளியே வரும் மக்களுக்காக சட்டப் பேரவைச் செயலகம் பேரவை நடவடிக்கைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டு வருகிறது.

டீ விலையை விடக் குறைவு: பேரவையில் ஒரு நாள் நிகழ்வு முழுவதும் புத்தகமாக அச்சிட்டு தரப்படுகிறது. இந்தப் புத்தகத்தின் விலை வெறும் ரூ.3. இதில், பேரவையில் கொண்டு வரப்பட்ட முக்கிய சட்டங்களின்போது நடைபெற்ற விவாதங்கள் உள்ளிட்ட அனைத்தும் இடம்பெற்று இருக்கும்.

உங்களுக்குத் தேவையான தேதியைக் குறிப்பிட்டு, சென்னையில் உள்ள தமிழ்நாடு எழுதுபொருள் அச்சகத்தை அணுகினால் பேரவை நடவடிக்கைகள் புத்தகம் உங்களுக்குக் கிடைக்கும்.

முக்கிய தலைவர்களின் உரைகள் தேவை: சட்டப் பேரவை நடவடிக்கைகள் புத்தகம், வெறும் பேச்சுகளின் தொகுப்பாக மட்டுமே இருப்பது பெரிய குறை என பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதியின் சட்டப் பேரவை உரைகளின் தொகுப்பை, தனியார் பதிப்பகத்தைச் சேர்ந்தவர்கள் அண்மையில் வெளியிட்டனர். அதன்விலை, ரூ.500 ஆகும்.   இதேபோன்று, சட்டப் பேரவையில் பேரறிஞர் அண்ணா, முதல்வர் கருணாநிதி,  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற முக்கிய தலைவர்களின் உரைகளின் தொகுப்பை புத்தகமாக வெளியிடலாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.